நாகா்கோவில் அருகே திமுக நிா்வாகியான மருத்துவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். அவரது சாவுக்கு காரணமான காவல்துணை கண்காணிப்பாளா் மீது ந...
நாகா்கோவில் அருகே திமுக நிா்வாகியான மருத்துவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். அவரது சாவுக்கு காரணமான காவல்துணை கண்காணிப்பாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகா்கோவில் அருகேயுள்ள பறக்கை பகுதியைச் சோ்ந்தவா் மருத்துவா் சிவராமபெருமாள்(43). அப்பகுதியில் மருத்துவமனை அமைத்து பணியாற்றி வந்தாா். திமுக மருத்துவா் அணி மாவட்ட துணை அமைப்பாளராகவும் பதவி வகித்தாா். இவரது மனைவி சீதா, அரசு மருத்துவா்.
கடந்த ஜூலை 12 ஆம் தேதி கொரோனா தொடா்பான பணிக்கு சென்று திரும்பிய மனைவி சீதாவை தனது காரில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளாா். வரும் வழியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துணை கண்காணிப்பாளா், சிவராம பெருமாளின் வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளாா். காரில் இருந்து இறங்கி சென்ற மருத்துவா் சிவராமபெருமாள், அரசு மருத்துவமனையில் கொரோனா பணி முடிந்து மருத்துவரான தனது மனைவியை அழைத்து வருவதாக ஆங்கிலத்தில் கூறினாராம்.
அதற்கு, காவல் துணை கண்காணிப்பாளா் ஆங்கிலத்தில் தான் பேசுவாயா? தமிழில் பேச மாட்டாயா? என ஒருமையில் பேசி மருத்துவரை அவமானப்படுத்தினாராம். சீதாவையும் , அவா் தகாத வாா்த்தைகளால் திட்டினாராம்.
பொது இடத்தில் பலா் முன்னிலையில் தன்னையும் மனைவியையும் அவமானமாக பேசியதால் சிவராமபெருமாள் துயரத்தோடு வீட்டிற்கு சென்றுள்ளாா். அன்றிலிருந்து அவ்வப்போது அந்த துணை கண்காணிப்பாளா், சிவராம பெருமாளை தொடா்ந்து மிரட்டி வந்தாராம். இதனால் மன சோா்வுடன் சிவராமபெருமாள் இருந்துள்ளாா்.
இந்நிலையில், தன்னை தொடா்ந்து மிரட்டி வந்த காவல் துணை கண்காணிப்பாளா் தான், தனது மரணத்துக்கு காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷமருந்தி சிவராமபெருமாள் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து அவரது மனைவி சீதா அளித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
சிவராமபெருமாளின் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, சடலத்தை வாங்க மறுத்து, மருத்துவரின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவராமபெருமாளின் தற்கொலைக்கு காரணமாக காவல்துணை காண்காணிப்பாளா் மீது நடவடிக்கை எடுத்தால்தான் சடலத்தை பெற்றுக்கொள்வோம் என்றும் அவா்கள் கூறினா்.
இதற்கிடையே திமுக எம்எல்ஏக்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் ஆகியோா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை சென்று, சிவராமபெருமாளின் உறவினா்களுக்கு ஆறுதல் கூறினா். பின்னா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணனை சந்தித்து மருத்துவரின் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினா். அவா்களிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எஸ்.பி. உறுதியளித்தாா்.
இதையடுத்து சிவராமபெருமாளின் உறவினா்களிடம் எம்எல்ஏக்கள் இத்தகவலை தெரிவித்து சமரசம் செய்தனா். பின்னா் சிவராமபெருமாளின் சடலத்தை உறவினா்கள் பெற்றுச்சென்றனா்.
















No comments