மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டுத்தெரு கிராமத்தை சேர்ந்தவர் தவமணி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலை...
மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டுத்தெரு கிராமத்தை சேர்ந்தவர் தவமணி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் 4-வதாக கர்ப்பம் அடைந்த சித்ராவுக்கு, கடந்த 10-ம் தேதி மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது. 3 நாட்கள் அவர் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்றார்.

பின்னர் அவர் தனது வீட்டுக்கு குழந்தையுடன் வந்தார். பிறந்த 5-வது நாளில் அந்த குழந்தை திடீரென இறந்துவிட்டது. உடலை சோழவந்தான் பழைய காவலர் குடியிருப்பின் பின்பக்கம் கருவேல மரம் அருகே புதைத்துள்ளனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
இதற்கிடையே குழந்தை மர்ம சாவு தொடர்பாக குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையின் தந்தை தவமணி, அவருடைய தாயார் பாண்டியம்மாள் ஆகியோர், “தாங்கள்தான் குழந்தையை கொன்று புதைத்தோம்” என வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
தவமணிக்கு 4-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தையை கொன்று விடுவது என கொடூர முடிவெடுத்துள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று குழந்தையை சித்ரா தூங்க வைத்துவிட்டு, மற்ற 3 குழந்தைகளுடன் வீட்டின் வெளியில் இருந்தார். அந்த சமயம் தவமணி, அவரது தாயார் பாண்டியம்மாள் ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு பாட்டிலில் கள்ளிப்பாலுடன் வந்தனர். அந்த பாலை குழந்தைக்கு வலுக்கட்டாயமாக கொடுத்துள்ளனர்.
பின்பு குழந்தையின் கால்களை பிடித்து தரையில் ஓங்கி அடித்துள்ளனர். இதில் கொடூர செயலால் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, இறந்தது. பின்னர் பழைய காவலர் குடியிருப்புக்கு பின் பகுதியில் கருவேலம் மரங்களுக்கு அடியில் குழி தோண்டி குழந்தையின் உடலை புதைத்துள்ளனர். இவ்வாறு திடுக்கிடும் தகவலை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பச்சிளம் பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்தும், தரையில் அடித்தும் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறியதாவது:- மதுரை மாவட்டத்தில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்வது தொடர்ந்து வருகிறது. குழந்தையை வளர்க்க முடியாது என நினைப்பவர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட வேண்டாம். அந்த குழந்தைகளை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கலாம். நாங்கள் அந்த குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்குவோம்.
ஏற்கனவே உசிலம்பட்டி பகுதியில் இதேபோன்ற சம்பவம் நடந்தது. குழந்தையை கொலை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சிலர் குழந்தைகளை எங்களிடம் ஒப்படைத்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
No comments