கன்னியாகுமரியில் ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல முடியாததால் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பத்தினர் ஆலமரத்தில் தொட்டில் கட்டி வாழ்ந்து ...
கன்னியாகுமரியில் ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல முடியாததால் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பத்தினர் ஆலமரத்தில் தொட்டில் கட்டி வாழ்ந்து வருகிறார்கள்.

கன்னியாகுமரி மகாதானபுரம் பகுதியில் மானாமதுரை உள்பட வெளியூர்களை சேர்ந்த 10 குடும்பங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கடந்த சில மாதங்களாக தங்கியுள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் கட்டிட தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வேலையிழந்து காணப்படுகின்றனர். அத்துடன் தங்களது சொந்த ஊர்களுக்கும் திரும்பி செல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.
அவர்கள் மகாதானபுரம் பகுதியில் சாலையோரம் கூடாரம் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். கூடாரத்தில் இடநெருக்கடி ஏற்படுவதால் அருகில் உள்ள ஆலமரக்கிளையில் சேலையினால் தொட்டில் கட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படுத்து தூங்குகிறார்கள்.
இவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்புகளும் கொரோனா நிவாரணமாக அரிசி, காய்கறி மற்றும் மளிகைபொருட்களை வழங்கி வருகிறார்கள். அந்த நிவாரண பொருட்களை வைத்து கடந்த 60-நாட்களுக்கு மேலாக அவர்கள் தங்களது வாழ்க்கையை கடத்துகிறார்கள்.
மரத்தடியில் விஷசந்துக்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு நாளையும் அச்சத்துடன் கடத்தி வருவதாகவும், ஊரடங்கு முழுமையாக தளர்த்த பின்புதான் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும் என்றும் கூறுகிறார்கள். மரத்தடியில் தொட்டில் கட்டி வாழும் குடும்பத்தினரை அந்த வழியாக செல்கிறவர்கள் பரிதாபத்துடன் பார்த்து செல்கிறார்கள்.
No comments