நாகர்கோவிலில் திருமணமான ஒரு மாதத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். கணவர் தூக்கில் தொங்குவதை பார்த்த இளம்பெண், கழுத்தை அறுத்த...
நாகர்கோவிலில் திருமணமான ஒரு மாதத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். கணவர் தூக்கில் தொங்குவதை பார்த்த இளம்பெண், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே உள்ள ஜீவாநகரை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 22). குறும்பட கேமராமேன். பல்வேறு குறும்படங்களுக்கு கேமராமேனாக பணியாற்றி உள்ளார். இவருக்கும், திருப்பூரை சேர்ந்த ஷாலினி (வயது 20) என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் இந்த பழக்கம் காதலாக மாறி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர், ஷாலினி தனது கணவருடன் நாகர்கோவிலில் வசித்து வந்தார்.
இந்நிலையில் விஷ்ணு, நண்பர்களுடன் சேர்ந்து தினமும் மதுகுடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவும் வழக்கம் போல் விஷ்ணு, குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இரவு ஏற்பட்ட தகராறு நேற்று காலையிலும் நீடித்தது.
அப்போது கோபம் அடைந்த ஷாலினி, தாலியை கழற்றி வைத்து விட்டு சென்று விடுவேன் எனக்கூறி உள்ளார். ஆனாலும் விஷ்ணு, தகராறை நிறுத்தாமல் தொடர்ந்து ஷாலினியை திட்டி, தாலியை கழற்றி வை பார்ப்போம் எனக்கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஷாலினி தாலியை கழற்றி வைத்ததாக தெரிகிறது.
இதனால் தகராறு அதிகரித்தது, அப்போது திடீரென படுக்கை அறைக்கு சென்ற விஷ்ணு, கதவை பூட்டிக்கொண்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் இருந்தவர்கள் கதவை திறந்து பார்த்தபோது அவர் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார்.
இதை பார்த்த ஷாலினி கதறி அழுதார். உடனடியாக சமையல் அறைக்கு சென்று, அங்கிருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஷாலினியை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஷ்ணு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், சப் இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
















No comments