Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

தக்கலையை சேர்ந்தவர் கடம் இசையில் பத்து ‘கின்னஸ்’ சாதனைகள்

இசைக்கு மயங்காத இதயம் இல்லை. அதில் தனித்துவம் பெற்றது, ‘கடம்’ இசை. தடிமனான மண்பானையால் தனித்துவமான இசையை, கடம் கலைஞர்கள் தருகிறார்கள். கர்...

இசைக்கு மயங்காத இதயம் இல்லை. அதில் தனித்துவம் பெற்றது, ‘கடம்’ இசை. தடிமனான மண்பானையால் தனித்துவமான இசையை, கடம் கலைஞர்கள் தருகிறார்கள். கர்நாடக இசையின் அங்கமாக இருந்த கடம், மேற்கத்திய இசையிலும் கால் பதித்து உலக அளவில் பெருமை பெற்றுக்கொண்டிருக்கிறது.
கடம் இசையில் பத்து கின்னஸ் சாதனைகளை படைத்திருப்பவர் அப்துல் ஹலீம். 37 வயதான இவர், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்தவர். அவர் தனது இசை சாதனையைப் பற்றி சொல் கிறார். “எனது தாயார் நன்றாக பாடுவார். அவர் மூலம்தான் எனக்கு இசை ஆர்வம் ஏற்பட்டது. சிறுவயதிலேயே இசையில் ஆர்வம் ஏற்பட்டதால், எங்கள் ஊரைச் சுற்றி எங்கு இசை நிகழ்ச்சிகள் நடந்தாலும் இசையை ரசித்துக் கேட்பதற்காக சென்றுவிடுவேன்.
இசை மீது இருந்த ஆர்வத்தால் பள்ளிப் படிப்பை முடித்ததும் இசையை முறைப்படி கற்பதற்காக, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து, இசையில் இளநிலை பட்டம் பெற்றேன். பின்பு கேரளாவில் உள்ள மகாத்மா இசைக் கல்லூரியில் எம்.ஏ. பயின்றேன். அடுத்து எம்.பில். படிப்பை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தபோது, ‘கடம் ஒரு ஆய்வு’ என்ற தலைப்பில், இசைக் கருவியான கடம் பற்றி ஆய்வு மேற்கொண்டேன். இதுதான் என் இசைப் பயணத்தில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியது.

பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்கத் தெரிந்த எனக்கு கடம் மீது தனி ஈர்ப்பு உருவானது. எளிய கருவியான அது, இனிய இசையை வழங்கியதால், அதிலே எனது முழு கவனத்தையும் செலுத்தத் தொடங்கினேன். அதற்கு சரியான அடித் தளத்தை அமைத்துக்கொள்ள சென்னையைச் சேர்ந்த வித்வான் சுரேஷிடம் முழுமையான கடம் இசைப் பயிற்சியைப் பெற்றேன். அவரால் பட்டைத் தீட்டப்பட்ட நான், அதில் ஏராளமான சாதனைகளும் படைத்திருக்கிறேன்” என்று கூறும் அப்துல் ஹலீம் கடம் இசையின் சிறப்பையும் வகைப்படுத்துகிறார்.
“கடம், கர்நாடக இசையின் ஓர் அங்கம். அது பாரம்பரிய இசைக்கருவியாக இருந்தாலும் தற்போது மேற்கத்திய இசையிலும் கால்பதித்து அதோடும் இரண்டற கலந்துவிட்டது. கடம், கைதேர்ந்த கலைஞர்களால் தயார் செய்யப்படுகிறது.

மானாமதுரையில் தயார் செய்யப்படும் கடம்தான் சிறந்ததாக இருக்கிறது, செம்மண்ணுடன் வைகை ஆற்று மண், கந்தகப்பொடி போன்றவைகளை கலந்து தடிமனான மண்பானை போன்று கடம் தயார் செய் கிறார்கள்” என்றார்.

கடம் இசையில் தனது சாதனை களைப் பற்றி விவரித்தபோது, “2010-ம் ஆண்டு தக்கலையில் முதன் முதலாவதாக உலக சாதனையை நிகழ்த்தினேன். அதன் மூலம் உலகிலேயே வேகமான கடம் வாசிப்பாளர் என்ற பெருமையைப் பெற்றேன்.
ஒரு நொடியில் 20 அடி இசை, அதாவது ஒரு நிமிடத்தில் 1200 அடி இசை எதிரொலிப்பை உருவாக்கி இந்தச் சாதனையைப் படைத்தேன். சர்வதேச அளவில் டிரம்ஸ் இசையில் மைக்மேங்னி என்பவர் இது போன்ற சாதனையை உருவாக்கியுள்ளார். அதுவே எனக்கும், அது போன்ற சாதனையை உருவாக்கும் எண்ணத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து கடம் இசையில் என் திறமையை நிரூபித்து 10 கின்னஸ் சாதனைகளைப் படைத்திருக்கிறேன். லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்திருக்கிறேன்.

கடம் இசை தொடர்புடைய பல்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்த விரும்பினேன். கடம் இசையை அடிப்படையாக வைத்து 3 குறும்படங்களை உருவாக்கினேன். இசை ஆல்பத்தையும் வெளியிட்டிருக்கிறேன். ஏராளமான இசைக் கச்சேரிகளை நடத்தியிருக்கிறேன். வெளிநாடு களிலும் இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ளேன். இசை ஒரே இடத்தில் முடங்கிவிடக்கூடாது. இயற்கையோடு கலந்து அனை வரிடமும் சென்றடைய வேண்டும். தனிப்பட்ட எந்த சமுதாயத்தோடும் நின்றுவிடாமல் எல்லோரது வாழ்வியலோடும் கலக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை” என்று கூறும் அப்துல் ஹலீம் இளைய தலைமுறையினரிடமும் கடம் இசையை கொண்டு சேர்ப்பதில் முனைப்புகாட்டி வருகிறார்.
“நான் வடக்கன்குளத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இசை ஆசிரியராக பணியாற்றுகிறேன். இசையில் சாதனை படைக்கும் மாணவர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். மாணவர்கள் மூலமும் கின்னஸ் சாதனை படைத்திருக் கிறேன். மாணவர்களுக்கு இசையில் ஆர்வத்தை ஏற்படுத்தி, அவர்களை இசையில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது உலக சாதனையைவிட பெரிய சாதனையாக இருக்கும் என்று கருதுகிறேன்.

அதிலும் ஓரளவு சாதித்துவிட்டதாக மனநிறைவு ஏற்பட்டிருக்கிறது. மாணவர்களோடு சேர்ந்து 12 மணி நேரம் தொடர்ச்சியாக கடம் வாசித்தது என்னால் மறக்க முடியாத அனுபவம்” என்கிறார், அப்துல் ஹலீம். இவரது வளர்ச்சிக்கு மனைவி மஞ்சுவும் பக்கபலமாக இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு ஆரிப் இப்னு என்ற மகன் உள்ளார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்