கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று ‘மஹா’ புயலாக உருவெடுத்து திருவனந்தபுரம் அருகே மையம் கொண்டுள்ளது. ...
கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று ‘மஹா’ புயலாக உருவெடுத்து திருவனந்தபுரம் அருகே மையம் கொண்டுள்ளது.
இந்த புயல் காரணமாக குமரி மாவட்டம் முழுவதும் கனமழை நீடிக்கிறது. நேற்று முன்தினம் முதல் பெய்து வரும் தொடர் மழை இன்று காலை வரை நீடித்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்திலேயே அதிகபட்சமாக மயிலாடியில் 12 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
விடிய விடிய பெய்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலையும் மழை நீடிப்பதால் குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டுள்ளார்.
குளச்சல் மற்றும் சுற்றுப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மழை நீடித்தது. மழை காரணமாக குளச்சல் அருகே பாட்டவிளையில் வீடு இடிந்து மரிய மதலேனாள் (வயது 75) என்ற பெண் பலியானார். இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். பிள்ளைகள் வெளியூரில் வசித்து வருகிறார்கள்.
இதனால் இந்த வீட்டில் மரிய மதலேனாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். நேற்றிரவு இவரது பக்கத்து வீட்டு சுவர் மழை காரணமாக இடிந்து இவர் வீட்டு மீது விழுந்ததால் இவரது வீட்டு சுவரும் இடிந்தது. இந்த இடிபாடுகளில் மரிய மதலேனாள் சிக்கி பலியாகி விட்டார்.
குளச்சல் போலீசாரும் தீயணைப்பு நிலைய அலுவலர் தேவராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் அங்கு சென்று ஒரு மணி நேரம் போராடி மரிய மதலேனாள் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
குமரி மாவட்டத்தில் மழை காரணமாக 50 வீடுகள் இடிந் துள்ளது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 4 வீடுகளும், தோவாளை தாலுகாவில் 3 வீடுகளும், கல்குளம் தாலுகாவில் 3 வீடுகளும், திருவட்டார் தாலுகாவில் 2 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 4 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 6 வீடுகளும் இடிந்தன.
இன்று காலையும் சில வீடுகள் இடிந்தன. இதன் காரணமாக இதுவரை 50 வீடுகள் இடிந்துள்ளது. ஏற்கனவே மாவட்டம் முழு வதும் 125 வீடுகள் இடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments