மார்த்தாண்டம் அருகே நட்டாலம் அருகே உள்ள சாரோடுகோணம் பகுதியைச் சேர்ந்தவர் காட்வின் டோனி, (வயது 28). இவர், நாகர்கோவில் ஆயுதப்படை போலீஸ்காரரா...
மார்த்தாண்டம் அருகே நட்டாலம் அருகே உள்ள சாரோடுகோணம் பகுதியைச் சேர்ந்தவர் காட்வின் டோனி, (வயது 28). இவர், நாகர்கோவில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.

இவரது மனைவி ஆஷா. இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.
இன்று காலை காட்வின் டோனி வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து நாகர்கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். தக்கலையை அடுத்த புலியூர்குறிச்சி-கொல்லவிளை இடையே அவர் வந்து கொண்டிருந்தார்.
அப்போது திருச்செந்தூரில் இருந்து களியக்காவிளை நோக்கி சென்ற அரசு பஸ் காட்வின் டோனி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் நிலை தடுமாறி பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கினார். சம்பவ இடத்திலேயே காட்வின் டோனி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
விபத்தை அடுத்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. விபத்து குறித்து தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். பிணமாக கிடந்த காட்வின் டோனியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காட்வின் டோனி பலியானது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அவரது மனைவி ஆஷா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அவர்கள் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.
விபத்து தொடர்பாக போலீஸ்காரர் காட்வின் டோனியின் மனைவி ஆஷா தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் காப்பிக்காட்டைச் சேர்ந்த கருணாகரனை (வயது 49) கைது செய்தனர்.
விபத்து நடந்த இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் காட்வின் டோனியின் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார்.
திருமணமான 5 மாதத்தில் காட்வின் டோனி பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
















No comments