நாகர்கோவில் அருகே அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் ஆசிரியை, காண்டிராக்டர் உள்பட 3 பேர் பலியானார்கள். ஐயப்பன் நாகர்கோவிலை அடுத்த அழகிய...
நாகர்கோவில் அருகே அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் ஆசிரியை, காண்டிராக்டர் உள்பட 3 பேர் பலியானார்கள்.
![]() |
| ஐயப்பன் |
நாகர்கோவிலை அடுத்த அழகியபாண்டியபுரம், கீழபிளவுக்கல் விளையை சேர்ந்தவர் சகாய ஜெகன். இவரது மனைவி மைக்கிளின் சுனிதா (வயது 34). இவர் பாராமெடிக்கல் கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
நேற்று மாலை வகுப்பு முடிந்து சுமார் 6 மணியளவில் தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். கேசவன்புதூர் திருப்பத்தில் வந்தபோது, கனமழையால் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
உடனே அப்பகுதி மக்கள் அவரை மீட்டு, பூதப்பாண்டி மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. பலியான மைக்கிளின் சுனிதாவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் விசாரணை நடத்தினர்.
அழகியபாண்டிபுரம் குறத்தியறை பகுதியை சேர்ந்தவர் பரமசிவவேளார். இவரது மனைவி கஸ்தூரி (வயது 60). சம்பவத்தன்று இவர், தனது மகனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தனக்கு தலை சுற்றுவதாக கூறி கீழே விழுந்தவர் பின்தலையில் அடிபட்டு உயிரிழந்தார். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் விசாரணை நடத்தினர்.
கன்னியாகுமரி தெற்கு குண்டல் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (வயது 42). கட்டிட காண்ட்ராக்டராக வேலைபார்த்து வந்தார். நேற்று மாலை பணிமுடிந்து பொற்றையடியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்.
நாகர்கோவிலை அடுத்த அச்சன்குளம் அருகே வந்தபோது, கன்னியாகுமரியில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டு வந்த பேருந்து, ஐயப்பன் பைக் மீது உரசியது. இதில் ஐயப்பன் நிலைதடுமாறி பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கினார். சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஐயப்பன் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அரசு விரைவு பேருந்து டிரைவர், கண்டன்விளை பகுதியை சேர்ந்த ராபர்ட் கிங்ஸ்லியை (வயது 51) கைது செய்தனர்.

















No comments