பாகிஸ்தானில் கோரவிபத்து சரக்கு ரெயில் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 6 பேர் சாவு 150 பேர் படுகாயம் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இருந்து கராச்சி ...
பாகிஸ்தானில் கோரவிபத்து சரக்கு ரெயில் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 6 பேர் சாவு 150 பேர் படுகாயம்
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இருந்து கராச்சி நகருக்கு ‘அவாம் எக்ஸ்பிரஸ்’ ரெயில் நேற்று சென்று கொண்டிருந்தது.
முன்னதாக, பஞ்சாப் மாகாணம் முல்தான் மாவட்டத்தில் உள்ள பூச் ரெயில் நிலையத்துக்கு அருகே ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் மோதி உயிர் இழந்தார். அவரது உடலை மீட்பதற்காக சரக்கு ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டிருந்த அதே தண்டவாளத்தில் ‘அவாம் எக்ஸ்பிரஸ்’ ரெயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த ரெயிலை தடுத்து நிறுத்துவதற்காக சிவப்பு விளக்கு காட்டப்பட்டது. ஆனால் எக்ஸ்பிரஸ் ரெயில் டிரைவர் அதனை கவனிக்கவில்லை.
மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயில் மீது பயங்கரமாக மோதியது. அதில் அவாம் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. அந்த 4 பெட்டிகளும் முற்றிலும் உருக்குலைந்து போயின. இந்த கோரவிபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 150 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாகிஸ்தானில் பக்ரீத் பண்டிகைக்காக 3 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால் மீட்பு குழுவை உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் மீட்பு பணியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின்னர் மீட்புப்படையினர் வரவழைக்கப்பட்ட போதிலும் விபத்து நடந்த பகுதியில் இருள் சூழ்ந்திருந்ததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.
சுமார் 4 மணி நேரமாக நடந்த மீட்பு பணிக்கு பின்னர் இடிபாடுகளில் சிக்கி இருந்த அனைவரும் மீட்கப்பட்டனர். படுகாயம் அடைந்த அனைவரும் முல்தான் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அந்த மருத்துவமனைகளில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. படுகாயம் அடைந்தவர்களில் 18 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
No comments