கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 13 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அரபிக் கடலில் டவ்தே புயல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கன்னிய...
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 13 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அரபிக் கடலில் டவ்தே புயல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை தொடங்கியது. அதன்காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் 2 வயது குழந்தை உள்பட 4 பேர் மரணம் அடைந்தனர்.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இன்று பெய்த மழை காராணமாக ராஜாக்கமங்கலம் பகுதியில் பயணிகள் நிழற்கூடை உடைந்து விழுந்தது. மீனாட்சிபுரத்தில் பள்ளி காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. ஏற்கனவே மழை காரணமாக பளுகல் பகுதியில் பாசிக்குளம் உடைந்து விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. தொடர் மழை காரணமாக பேச்சிபபறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் நிரம்பி வருகின்றன.
உபரி நீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியகுளம், காக்கை குளம், தாமரைக்குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. குளத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் குறும்பனை வயல் காலனி பகுதியில் பாய்ந்ததால் அங்குள்ள 150- க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அப்பகுதி இளைஞர்கள் வீடுகளில் இருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களை மீட்டு புனித இஞ்ஞாசியார் பள்ளியிலும், திருமண மண்டபத்திலும் பாதுகாப்பாக தங்கவைத்துள்ளனர்.
மூன்று குளங்களில் உள்ள தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுகுள் பாயாமல் வேறு வழியாக கடலுக்கு மாற்றிவிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்ததாலும், மரங்கள் மின் கம்பம் மீது சாய்ந்தாலும் மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அவதியுற்றனர்.
தொடர்மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 145 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அதில் 11 வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. இதுபோக நூற்றுக்கணக்கான ஏக்கர் வாழை உள்ளிட்ட பயிர்கள் மழையால் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளானர். தொடர்ந்து பெய்துவரும் மழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
No comments