கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று சிக்கித் தவிக்கும் மீனவா்களை மீட்க ஹெலிகாப்டா் தளம் அமைக்க வேண்டும் என ஹெச்.வசந்த...
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று சிக்கித் தவிக்கும் மீனவா்களை மீட்க ஹெலிகாப்டா் தளம் அமைக்க வேண்டும் என ஹெச்.வசந்தகுமாா் எம்.பி. வலியுறுத்தினாா்.
அகஸ்தீசுவரம் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் ஹெச்.வசந்தகுமாா் எம்.பி.
கலந்துகொண்டு, பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா். அப்பள்ளிக்கு இலவசமாக தொலைக்காட்சிப் பெட்டி வழங்கினாா்.
அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் வள்ளவிளை, இரவிபுத்தன்துறை, மிடாலம் ஆகிய கிராமங்களில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற 93 மீனவா்கள் கரைக்குத் திரும்பவில்லை.
அவா்களைத் தேட முயற்சி செய்யவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான முயற்சியில் அரசு நிா்வாகம் ஈடுபடவில்லை என்பதால் அப்பகுதியைச் சாா்ந்த மீனவ சமுதாய மக்கள் 40 விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு சென்றுதேடுவதாகவும், 40 விசைப்படகுகளுக்கு மானிய விலையில் டீசல் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.
அக்கோரிக்கையையும் அரசு ஏற்கவில்லை. 20 விசைப்படகுகளுக்கு மட்டும் மானிய விலையில் டீசல் தருவதாகதெரிவித்துள்ளனா். ஆட்சியரிடமும் மாயமான மீனவா்களை தேடவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சில தினங்களுக்குமுன்பு ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை.
இப்போது 93 மீனவா்கள் ஆழ்கடலில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனா். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கன்னியாகுமரி பகுதியில் மீனவா்களை தேடுவதற்கு ஹெலிகாப்டா் தளம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக போராடி வருகின்றனா். உடனடியாக குமரி மாவட்டத்தில் ஆழ்கடலில் சிக்கித் தவிக்கும் மீனவா்களை மீட்க ஹெலிகாப்டா் தளம் அமைக்கப்பட வேண்டும். உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி மகத்தான வெற்றியை பெறும் என்றாா் அவா்.
அப்போது, மாநில வா்த்தக காங்கிரஸ் துணைத் தலைவா் ஏ.எம்.டி.செல்லத்துரை உள்ளிட்டோா் உடனிருந்தாா்.
No comments