விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு எதிர்ப்பது ஏன்? - கருணாநிதி அறிக்கை 30-01-2013 தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் க...
விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு எதிர்ப்பது ஏன்? -
கருணாநிதி அறிக்கை
30-01-2013
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள “விஸ்வரூபம்” திரைப்படத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடைதான் தமிழகத்திலே அனைவரது கவனத்தையும் ஈர்த்திட்ட பிரச்சினையாகும். 29-1-2013 அன்று மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதியரசர் கே.வெங்கட்ராமன் முன்னிலையில் ஆறு மணி நேரம் இதுபற்றிய வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது.
“விஸ்வரூபம்” திரைப்படம் தமிழகத்தில் ஜனவரி 25ஆம் தேதியன்று வெளியிடப்படுவதாக இருந்தது. இந்தத் திரைப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக ஒரு புகார் எழுந்தது. இதையடுத்து ஒரு இஸ்லாமிய அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தமிழக அரசு “விஸ்வரூபம்” திரைப்படத்தை தமிழகத்திலே வெளியிட தடை பிறப்பித்தது. தடை உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் படத்தைத் தயாரித்த ராஜ்கமல் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு விசாரணைதான் ஆறு மணி நேரம் நடைபெற்றுள்ளது.
இஸ்லாமிய சமுதாயத்தின்பால் நானோ, தம்பி கமல் ஹாசனோ, நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினியோ எந்த அளவிற்கு பாசமும் பற்றும் மதிப்பும் மரியாதையும் உடையவர்கள் என்பதை இந்தப் பிரச்சினை எழுந்தவுடன் 26-1-2013 நான் விடுத்த அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன்.
சூப்பர் ஸ்டார் ரஜினி விடுத்த அறிக்கையிலும், இஸ்லாமியர்களுக்கு வேண்டுகோள் விடுத்து, இந்தத் திரைப்படத்தை வெளியிட உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ஜ.க. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவன், திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, பார்த்திபன், அமீர் போன்றவர்கள் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டுமென்று அறிக்கைகள் வாயிலாகக் கேட்டுக் கொண்டனர்.
மேலும் அவர்கள் அறிக்கையில் கமல் எப்படிப்பட்டவர் என்பதையும், யாருடைய மனதையும் புண்படுத்தும்படியாக நடந்து கொள்ளாதவர் என்பதையும் எடுத்து எழுதினார்கள். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் சுமூகமான தீர்வு ஏற்படுத்த முதலமைச்சர் கமலஹாசனை அழைத்துப் பேசவேண்டுமென்று அறிக்கை விட்டிருந்தார். இவ்வளவிற்கும் மேலாக, கமல் விடுத்த அறிக்கையில், தான் இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் அல்ல என்றும், இந்தப் படமும் முஸ்லீம்களுக்கு எதிரானது அல்ல என்றும், முஸ்லீம்கள் தனக்கு சகோதரர்கள் என்றும் தெரிவித்திருந்தார். ஆனாலும் தமிழக அரசு தான் விதித்த தடையைத் திரும்பப் பெற முன்வரவில்லை.
தமிழக அரசு இந்த அளவிற்குக் கடுமையாக இந்தத் திரைப்படத்திற்கு தடை விதிப்பதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. ஆனால் ஒரு சாரார், இந்தத் திரைப்படத்தை அ.தி.மு.க.விற்கு மிகவும் வேண்டிய ஒரு தொலைக்காட்சி நிறுவனம் அடிமாட்டு விலைக்கு வாங்க முயன்றதாகவும், ஆனால் படத்தைத் தயாரித்தவர்கள் தாங்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து இந்தத் திரைப்படத்தைத் தயாரித்துள்ள நிலையில் குறைந்த விலைக்கு விற்க மறுத்து விட்டு, அதிக விலைக்கு வேறொரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விற்று விட்டதுதான் காரணம் என்றும் சொல்கிறார்கள்.
அதைப் போலவே, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தைப் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் கமல் பேசும்போது, “வேட்டிக் கட்டிய ஒரு தமிழன், பிரதமராக வரவேண்டும்” என்று ப.சிதம்பரத்தைக் குறிப்பிட்டுப் பேசியதும் கோபத்திற்கு ஒரு காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்தக் கருத்துக்கள் எல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்று நமக்குத் தெரியவில்லை.
இந்த வழக்கினை விசாரிக்கும் உயர்நீதி மன்ற நீதிபதியே, இந்தப் படத்தினை சிறப்புக் காட்சியின் மூலமாக நேரிலே பார்த்தார். அதன் பிறகு 28ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, உயர்நீதி மன்ற நீதிபதியே, இரு தரப்பினரும் கலந்து பேசி ஒரு நல்ல முடிவினைக் காணலாம் என்று தெரிவித்தார். ஆனால் தமிழக அரசு அதற்கான முயற்சியிலும் ஈடுபடவில்லை.
ஒரு ஆங்கில நாளிதழ் இந்தப் பிரச்சினை பற்றி ஒரு நீண்ட தலையங்கமே எழுதியுள்ளது. அதில், “கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் நியாயமில்லாத தடையை விலக்கிக் கொள்வதில் ஏற்பட்டு வரும் தாமதம் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாததாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இந்திய உச்சநீதி மன்றம் “அரக்சன்” என்ற இந்தித் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இரண்டு மாதத் தடை உத்தரவை ரத்து செய்தது. அப்படி ரத்து செய்யும்போது மத்திய தணிக்கைக்குழு ஒரு திரைப்படத்திற்கு அனுமதி அளித்த பிறகு, அந்தப்படம் திரையிடப்படுவது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்று நினைக்கக் கூடாது.
இந்திய உச்சநீதி மன்றம் மேலும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினையும் வழங்கியுள்ளது. எஸ்.ரெங்கராஜன் என்பவருக்கும் பி.ஜெகஜீவன் ராம் என்பவருக்கும் இடையே நடைபெற்ற ஒரு வழக்கில், உச்சநீதி மன்றம் “வன்முறைக்கு வழி வகுக்கும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்பதற்காக பேச்சுரிமையை நசுக்கக் கூடாது” என்று தீர்ப்பு அளித்துள்ளது. விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். வெளியிடப்படும் திரையரங்குகளுக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் தேவையான பாதுகாப்பைத் தர வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இவ்வாறு எழுதியதற்குப் பிறகும் தமிழக அரசு முன்வந்து தான் விதித்த தடையைத் திரும்பப் பெற்றிட முன் வந்ததா? தமிழக அரசு முன் வராத காரணத்தால்தான் நேற்றையதினம் உயர் நீதி மன்றத்தில் ஆறு மணி நேரம் வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது.
அந்த வழக்கில் கமலுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர், விஸ்வரூபம் திரைப் படம் இந்திய முஸ்லீம்கள் யாரையும் அவமானப் படுத்தவில்லை என்றும், தமிழகம் முழுவதும் 31 மாவட்ட கலெக்டர்களும் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிடும் என்று ஊகித்து ஒரே நேரத்தில் தடை உத்தரவு பிறப்பிக்க முடியுமா என்றும், இந்தத் திரைப்படத்திற்கு அனுமதி சான்றிதழ் வழங்கும் போது, தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படவில்லை என்றும், தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய பிறகு, மாநில அரசு தடை விதிக்க முடியாது என்றும், இந்தப் படத்தில் தன் ஒட்டுமொத்த வாழ்க்கை சம்பாத்தியத்தையும் கமல்ஹாசன் முதலீடு செய்திருக்கிறார் என்றும் அடுக்கடுக்காக தன் வாதங்களை எடுத்து வைத்திருக்கிறார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர் வெங்கட்ராமன் தனது தீர்ப்பினை இரவு 10.15 மணிக்குத் தான் அளித்துள்ளார். அதில் இந்தத் திரைப்படத்திற்கு அரசு விதித்திருந்த 144 தடையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித் திருக்கிறார். ஆனால் இதற்குப் பிறகும் அ.தி.மு.க. அரசு மனம் இரங்கியதா? இல்லை, இரவோடு இரவாக நள்ளிரவில் 11.30 மணிக்கு தலைமை நீதிபதி பொறுப்பிலே உள்ள நீதியரசர் எலிபி தர்மாராவ் வீட்டிற்கே சென்று, தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய மனு கொடுத்திருக்கிறார்கள்.
தலைமை நீதிபதி அதை ஏற்றுக் கொண்டு இன்று (30-1-2013) காலை 10.30 மணிக்கு அப்பீல் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறார். எந்த அளவிற்கு ஜனநாயகமும், மனிதாபிமானமும் இந்த அரசினரிடம் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேட வேண்டுமா என்ன? இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

















No comments