குளச்சலை சேர்ந்த மீனவர் வலையில் ராட்சத சுறா மீன் சிக்கியது. 5 மணி நேரம் போராடி கரை சேர்த்தனர். குமரி மாவட்டம் குளச்சல் மரமடியை சேர்ந்தவர் மெ...
குளச்சலை சேர்ந்த மீனவர் வலையில் ராட்சத சுறா மீன் சிக்கியது. 5 மணி நேரம் போராடி கரை சேர்த்தனர்.
குமரி மாவட்டம் குளச்சல் மரமடியை சேர்ந்தவர் மெல்பின் (வயது 40). இவர் சொந்தமாக பைபர் படகு வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார். நேற்று வழக்கம்போல் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து படகில் 2 பேருடன் மெல்பின் மீன்பிடிக்க சென்றார். அப்போது அவர்கள் கடலில் வலையை வீசிய சிறிது நேரத்தில் ராட்சத மீன் ஒன்று படகு மீது மோதியது. இதனால் படகு குலுங்கியது.
அதே சமயத்தில் அந்த ராட்சத மீன், வலையில் சிக்கி கொண்டது. உடனே மீனவர்கள் வலையை இழுத்து படகை கரை நோக்கி செலுத்தினர். மீன்வலை மிகவும் கனமாக இருந்ததால் மீனவர்கள் உற்சாகம் அடைந்தனர்.
அந்த சமயத்தில் திடீரென வலை அறுந்தது. அப்போது தான் மீனவர்களுக்கு, வலையில் சிக்கியது ராட்சத உடும்பு சுறா மீன் என்பது தெரியவந்தது. மீனை தப்பவிட்டால் படகை கவிழ்த்து விடும் என்பதால் செய்வதறியாது தவித்த மீனவர்கள் கயிற்றால் மீனை கட்டினர்.
பிறகு சுமார் 5 மணிநேரம் போராடி குளச்சல் துறைமுகத்திற்கு மீனுடன் வந்தனர். தொடர்ந்து விசைப்படகின் கப்பி மூலம் மீனை கரை சேர்த்தனர். அந்த ராட்சத உடும்பு சுறா சுமார் 12 அடி நீளமும், 1½ டன் எடை கொண்டதாக இருந்தது.
கரை சேர்க்கப்பட்ட உடும்பு சுறாவை பொதுமக்கள் வேடிக்கையுடன் கண்டு களித்தனர். சிறுவர்கள் அதன் மீது ஏறி உட்கார்ந்து சவாரி செல்வதுபோல் விளையாடியும் மகிழ்ந்தனர். ராட்சத உடும்பு சுறாமீன் பற்றி மீனவர்கள் கூறுகையில், இந்த மீன் ரூ.50 ஆயிரத்திற்கு ஏலம் போனது. மருத்துவ குணம் கொண்ட இந்த மீனை சாப்பிடவும் செய்யலாம்.
இதுபோக மீனின் இறக்கைகளை வெட்டி எடுத்து உலர வைத்து பின்னர் கேரள வியாபாரிகளிடம் விற்கப்படும். அதே சமயத்தில் ராட்சத மீனால் மீனவரின் வலை சேதமடைந்தது. இதனால் அவருக்கு ரூ.1 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
No comments