மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருப்பணிகள் ஆகம விதிப்படி தான் நடக்கிறது என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெ...
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருப்பணிகள் ஆகம விதிப்படி தான் நடக்கிறது என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் சுயம்பு புற்று வடிவிலானது. கேரள பெண் பக்தர்கள் இருமுடிக் கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் 2- ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கோவிலின் கருவறை மேற்கூரை முழுவதும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து கோவிலில் இரும்பிலான தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது. இதில் பல்வேறு தகவல்கள் கூறப்பட்டது.
முதல் பரிகாரமாக மிருத்யுஞ்சய ஹோமம் நடந்தது. ஜூலை 19-ந் தேதி வாஸ்து பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று ரூ.1.08 கோடியில் கோவில் திருப்பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு திருப்பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற நாள் முதல் சாதி, சமய வேறுபாடின்றி அனைவரும் அவரவர் வழிபாட்டு முறையில் சுதந்திரமாக வழிபாடு நடத்தி வருகிறார்கள். மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் தீ விபத்து நடந்த நாள் முதல் நான் 3 முறை வந்து ஆய்வு செய்தேன். ஆன்மிக பெரியோர்களின் கருத்து கேட்டு கோவில் திருப்பணிகள் ஆகம விதிப்படி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தேவ பிரசன்னம், வாஸ்துவில் கூறியபடிதான் ரூ.1.08 கோடியில் புனரமைப்பு பணிகள் நடக்கிறது.
பிரசன்னம் பார்த்த நிகழ்ச்சியில் துறை அமைச்சர் என்ற முறையில் நானும் பங்கேற்றேன். இன்று திருப்பணிகள் தொடங்கும் நாளில் ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தியது நியாயமற்றது. அவர்கள் முன்னிலையில் பரிகாரபூஜை செய்வது சாத்தியமற்றது. அவர்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி நேரடியாக தரலாம். நியாயமான கருத்துகள், ஆலோசனைகளை இந்த அரசு ஏற்கும். தவறுகளை சுட்டிக்காட்டினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தக்கலை அருகே கேரளபுரம் கருப்பு - வெள்ளை நிறம் மாறும் அதிசய விநாயகர் கோவிலை அடுத்த முறை வரும்போது பார்வையிடுவேன். அந்த கோவிலுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments