திங்கள்நகர் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் மூன்று பிரிவுகளாக கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த பேருந்து ந...
திங்கள்நகர் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் மூன்று பிரிவுகளாக கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.

இந்த பேருந்து நிலையத்தின் மேற்கூரைகள் பழுது ஏற்பட்டதை தொடர்ந்து, இதுகுறித்து பயணிகள் மற்றும் அரசியல் கட்சியினர் அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து இந்த பேருந்து நிலையத்தை முழுமையாக அகற்றிவிட்டு ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் ரூ. 5 கோடியே 85 லட்சம் செலவில் கட்ட தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. புதிய பேருந்து நிலையத்தின் திறப்பு விழா நேற்று (05-02-2021) நடந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.
நேற்று முதல் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பேருந்துகள் நேற்று முதல் இயக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் பாபு சந்திரசேகர், பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் புஷ்பலதா, இளநிலை பொறியாளர் செல்வன் ஜார்ஜ், திங்கள்நகர் பணிமனை கிளை மேலாளர் வேல்முருகன், குளச்சல் போக்குவரத்து ஆய்வாளர் செல்லத்துரை மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments