திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்கு செல்லும் குமரி சுவாமி விக்ரகங்களுக்கு, களியக்காவிளை எல்லையில் கேரள போலீசார் மரியாதை செலுத்தி அழைத்து செ...
திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்கு செல்லும் குமரி சுவாமி விக்ரகங்களுக்கு, களியக்காவிளை எல்லையில் கேரள போலீசார் மரியாதை செலுத்தி அழைத்து சென்றனர்.
திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா வரும் 17ம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், பத்மனாபபுரம் தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன் சுவாமி விக்ரகங்கள் நேற்று காலை 8.30 மணிக்கு பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து புறப்பட்டன. இந்த சுவாமி பவனி சாமியார்மடம், மார்த்தாண்டம் வழியாக நேற்று இரவு குழித்துறை மகாதேவர் கோயிலை வந்தடைந்தது.
அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை சுமார் 5 மணிக்கு களியக்காவிளை நோக்கி சுவாமி பவனி கிளம்பியது. நிகழ்ச்சியில் குமரி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, கண்காணிப்பாளர்கள் ஆனந்த், சிவகுமார், குழித்துறை மகாதேவர் கோயில் காரியம் சுதர்சனம், டிரஸ்ட் தலைவர் வெங்கட்ராமன், பொருளாளர் பிரதீப், தொழிலாளர்கள் உன்னி, பார்கவன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் சுவாமி பவனி திருத்தவபுரம், படந்தாலுமூடு வழியாக சுமார் 8.30 மணிக்கு களியக்காவிளையை வந்தடைந்தது. அதன்படி எல்லையில் கேரள தேவசம்போர்டு கமிஷ்னர் திருமேனி, திருவனந்தபுரம் மாவட்ட துணை கமிஷனர் மதுசூதனன், புறநகர் எஸ்பி அசோக்குமார் ஆகியோரிடம், மன்னரின் உடைவாள், சுவாமி விக்ரகங்கள் ஒப்படைக்கப்பட்டன.
இவற்றை குமரி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, எஸ்பி பத்ரிநாராயணன் ஆகியோர் ஒப்படைத்தனர். கொரோனா பரவல் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான கேரள போலீசார் மட்டுமே சுவாமிகளுக்கு மரியாதை செலுத்தி அழைத்து சென்றனர்.
இதையடுத்து இன்று மதியம் நெய்யாற்றின்கரைக்கு சுவாமி சிலைகள் கொண்டு செல்லப்படுகிறது. அப்போது வழியில் பொது மக்கள் வரவேற்பு, பூஜைகள் ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நாளை மாலை சாமி விக்ரங்கள் கரமனையை சென்றடைகிறது.
No comments