குடியுரிமை திருத்தச் சட்டம் விவகாரத்தில் முஸ்லீம் சகோதரர்கள் தவறாக வழி நடத்தப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்திருக்கிறார்....
குடியுரிமை திருத்தச் சட்டம் விவகாரத்தில் முஸ்லீம் சகோதரர்கள் தவறாக வழி நடத்தப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்திருக்கிறார்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்ற தசரா விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டம் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கும் எதிரானது இல்லை என்றும் முஸ்லீம் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக பொய் பிரச்சாரங்கள் செய்யப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். போலி தகவல்களை உலவவிட்டு இஸ்லாமிய சகோதர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாக மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
சிஏஏ குறித்து விரிவாக விவாதிப்பதற்குள் கொரோனா நம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துக்கொண்டது என்றும் எல்லை விவகாரத்தில் இந்தியாவின் பதிலடியை பார்த்து சீனா மிரண்டு போய் உள்ளதாகவும் மோகன் பாகவத் கூறியிருக்கிறார். இதனிடையே சி ஏ ஏ வை முன்னிறுத்தி மீண்டும் சிலர் போராட்டங்களை தூண்டும் முயற்சியில் இறங்கியிருப்பதாக அவர் சாடியிருக்கிறார்.
தங்களை பொறுத்தவரை ஆட்சி, அதிகாரம் மீது ஆசைகொள்ளவும் இல்லை அதன் மீது கவனம் செலுத்துவதும் இல்லை என சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆண்டுதோறும் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தசரா விழா வெகு விமரிசையாக நடைபெறும் சூழலில் இந்தாண்டு கொரோனா காரணமாக 50 பேரை கொண்டு மட்டுமே நிகழ்ச்சி நடைபெற்றது.
மோகன் பாகவத் தனது பேச்சின் போது, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் 370 ரத்து, அயோத்தி வழக்கில் தீர்ப்பு, உள்ளிட்ட விவகாரங்களையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
No comments