குமரி மாவட்டம் முழுவதும் கஞ்சா போதை ஊசி சப்ளை செய்த கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் ...
குமரி மாவட்டம் முழுவதும் கஞ்சா போதை ஊசி சப்ளை செய்த கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் இளைஞர்கள் கல்லூரி மாணவர்கள் பலர் போதை ஊசிக்கும், கஞ்சா புகைக்கும் அடிமையாகி உள்ளனர். குமரி மாவட்டத்தில் தாராளமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும், கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. பல இடங்களில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இது தொடர்பாக புகார்களின் அடிப்படையில் கஞ்சா மற்றும் போதை ஊசி விற்பனை செய்பவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இதில் இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் வடசேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி தலைமையில் வடசேரி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் சோதனை செய்வதற்காக நிறுத்தினர். ஆனால் போலீசாரை பார்த்ததும் காரை நிறுத்தி விட்டு அதில் இருந்தவர்கள் இறங்கி தப்ப முயன்றனர். போலீசார் அவர்களை விரட்டி சென்றதில் ஐந்து பேர் பிடிபட்டனர், 2 பேர் தப்பி ஓடினர். இத்தனை தொடர்ந்து பிடிபட்ட காரில் சோதனை நடத்திய போலீசார் அதிலிருந்து கஞ்சா மற்றும் போதை ஊசிகளைப் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர்கள், கட்டையன்விளை காமராஜர் நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் 55, மேல புத்திரியை சேர்ந்த சரவணன் 23, பறக்கை எம் எம் கே நகரை சேர்ந்த மணிகண்டன் 33, திருநெல்வேலி விகே புரத்தை சேர்ந்த கார்த்திக் ராஜா 31, கருங்குளம் பகுதியை சேர்ந்த கண்ணன் 46 என்பது தெரியவந்தது.
இவர்கள் ஐந்து பேரையும் கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து 2.25 கிலோ கஞ்சா மற்றும் போதை மருந்துகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய நாகர்கோவில் அருகுவிளையை சேர்ந்த சேகர், சரத் ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
இவர்கள் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை ஊசி மருந்துகளை சப்ளை செய்துள்ளனர். மேலும் வாட்ஸ்அப் குரூப் நடத்தி அதன் மூலம் இளைஞர்களுக்கு வலைவிரித்து போதை மருந்துகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. வடசேரி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















No comments