நாகர்கோவில் அருகே 2014ம் ஆண்டு தாய், தந்தை மகள் என மூன்று பேரை கொலை செய்த வழக்கில் 6 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த நபர் திருவனந்...
நாகர்கோவில் அருகே 2014ம் ஆண்டு தாய், தந்தை மகள் என மூன்று பேரை கொலை செய்த வழக்கில் 6 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த நபர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்

நாகர்கோவில் அருகில் உள்ள வெள்ளமடம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் சுப்பையா (57). இவர் திருநெல்வேலியில் மத்திய சுங்கத்துறை அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி வசந்தி (52). குழந்தை இல்லாததால் அபிஸ்ரீ (13) என்ற பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்தனர்.
இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி வீட்டுத் தோட்டத்தில் வசந்தியும், அபிஸ்ரீயும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். அன்று முதல் சுப்பையாவையும் காணவில்லை. 26ம் தேதி முப்பந்தல் வனப்பகுதியில் அழுகிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.
இது தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், 2015ம் ஆண்டு இவ்வழக்கு சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிபிசிஐடி விசாரணையில் சுப்பையாவின் வீட்டிலிருந்து பணம் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்த அதே பகுதியைச் சேர்ந்த மெரின் ராஜேந்திரன் என்பவர் 3 பேரையும் கொலை செய்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மெரின் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் உதவி செய்த அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை போலீசார் தேடிவந்தனர்.
இதற்கிடையே, சுரேஷ் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். அவர் தொடர்பான விபரங்களை சிபிசிஐடி போலீசார் சேகரித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து சுரேஷ் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருவதாக தகவல் கிடைத்தது.
இதனால், உஷாரான சிபிசிஐடி போலீசார் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சுரேஷ் வந்திறங்கிய போது, அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை குமரிமாவட்டம் கொண்டுவந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments