அழிக்காலில் ஊருக்குள் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. பொழிமுகத்தில் மணல் திட்டு அகற்றியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. அழிக்கால் பகுதிய...
அழிக்காலில் ஊருக்குள் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. பொழிமுகத்தில் மணல் திட்டு அகற்றியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

அழிக்கால் பகுதியில் பாம்பூரி வாய்க்காலில் மழைகாலத்தில் நீர் நிரம்பி கடலில் கலக்கும். கடந்த சில நாட்களாக பொழிமுகம் மணல் திட்டினால் அடைபட்டு மழைநீர் வழிந்தோட முடியாமல் தடைபட்டது.
இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
அழிக்கால் பாம்பூரி வாய்க்காலில் மழைநீர் கரை புரண்டு ஓடுகிறது. பொழிமுகத்தில் மணல் குவிந்துள்ளதால் மழை நீர் கடலில் பாய்ந்தோட முடியாமல் அழிக்கால் ஊருக்குள் புகுந்தது.
வின்சென்ட் நகர், மாதா நகரில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மீனவர்கள் கடும் இன்னலுக்கு ஆளானார்கள். இதையடுத்து மீனவர்கள் மின் மோட்டார் வைத்து மழை நீரை வெளியேற்றினர்.
கணபதிபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் டேவிட்சன், நீண்டக்கரை பி கிராம வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் சம்பவ இடம் சென்று பார்வையிட்டனர். பின்னர் பொக்லைன் மூலம் மணல் திட்டை தோண்டி மழைநீரை கடலுக்கு திருப்பி விட்டனர். இதனால் சேதம் தவிர்க்கப்பட்டது.
No comments