குமாரபுரம் அருகே 3 பேர் கால்வாயில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடித்தபோது, வாலிபர் இறந்த சம்பவத்தில் சக நண்பர் ஒருவரை போலீசார் பிடித்து விசார...
குமாரபுரம் அருகே 3 பேர் கால்வாயில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடித்தபோது, வாலிபர் இறந்த சம்பவத்தில் சக நண்பர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
குமரி மாவட்டம் சித்திரங்கோடு அருகே பெருஞ்சக்கோணம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் ராஜ் மகன் தினேஷ் (வயது 22). டிப்ளோமா படித்துள்ளார்.
நேற்று காலை தினேஷின் நண்பர்கள் விஜூ, ஆகாஷ் ஆகியோர் அவரது வீட்டுக்கு வந்து மீன்பிடிக்க அழைத்தனர். 3 பேரும் கீழசித்திரங்கோடு பகுதியில் செல்லும் புத்தனாறு கால்வாயில் வலை, தூண்டில் போட்டு மீன்பிடிக்காமல், மூங்கில் கம்பின் ஒரு முனையில் இரும்பு பைப்பை இணைத்து, அதற்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து மின்சார இணைப்பு கொடுத்து மீன் பிடித்தனர்.
தண்ணீரில் மின்சாரம் பாய்ச்சப்பட்டதால் சிறிய மீன்கள் செத்து மிதந்தன. அதை 3 பேரும் எடுத்தனர். அப்போது பெரிய மீன் பிடிபட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர்கள் மூங்கிலை தூக்கியபோது எதிர்பாராத விதமாக மூங்கிலுடன் இணைத்து இருந்த மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த இரும்பு பைப் தினேஷ் மீது பட்டது.
இதில் அவர் கால்வாயில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்து பதறிப்போன நண்பர்கள் 2 பேரும் தப்பித்து ஓடினர். இது குறித்து தகவல் அறிந்த கொற்றிக்கோடு போலீசார் தினேஷ் உடலை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். தினேஷை ஆற்றில் இறங்க கூறிவிட்டு மற்ற 2 பேரும் மின் இணைப்பு கொடுத்துள்ளனர். அப்போது மின்சாரம் பாய்ந்து அவர் இறந்துள்ளார்.
எனவே இதற்கு காரணமான விஜூ, ஆகாஷ் ஆகியோரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினேஷின் உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர். இதன் அடிப்படையில் போலீசார் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
No comments