விநாயகர் சதுர்த்திவிழா அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம். வடநேரே கூறியுள்ளார். இந்த...
விநாயகர் சதுர்த்திவிழா அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம். வடநேரே கூறியுள்ளார்.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 2-ம் தேதி கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்து முன்னணி, சிவசேனா, பாரதிய ஜனதா, தமிழ்நாடு சிவசேனா, இந்து மகாசபா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு பின்னர் நீர் நிலைகளில் கரைக்கப்படும்.
2-ம் தேதி பூஜைக்கு வைக்கப்படும் சிலைகள் செப்டம்பர் 6-ம் தேதி முதல் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.விநாயகர் சதுர்த்தியை அமைதியாக நடத்துவது தொடர்பாக, இந்து அமைப்புகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (19-08-2019) மாலையில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத், கலெக்டர் நேர்முக உதவியாளர் சுகன்யா, ஏ.டி.எஸ்.பி. விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்து முன்னணி சார்பில் மிசா சோமன், குழிச்சல் செல்லன், ராஜேஸ்வரன், ஆர்.கே.கண்ணன், செந்தில், நம்பி ராஜன், இந்து கோவில்கள் கூட்டமைப்பு மாவட்ட செயலளார் நாஞ்சில் ராஜா, இந்து மகாசபா சார்பில் பொன் வெற்றிவேல், நீலகண்டன் மற்றும் சிவசேனா, தமிழ்நாடு சிவசேனா உள்பட இந்து அமைப்புகள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- விநாயகர் சிலை அமைக்க உத்தேசித்துள்ள அமைப்பாளர் சிலை வைக்கப்படும் இடத்துக்கு தடையில்லா சான்று பெற்று உரிய படிவத்தில் தொடர்புடைய சார் ஆட்சியர் அல்லது கோட்டாட்சியரிடம் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். சிலை வைக்கப்படும் இடம் பொது இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட ஊராட்சி அல்லது பேரூராட்சி அல்லது நகராட்சி அல்லது நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி பெற வேண்டும். தனியார் உரிமையாளருக்குரிய இடமாக இருந்தால் அவரிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். ஒலிபெருக்கி மற்றும் அனுமதிக்காக தடையில்லா சான்று, சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளரிடம் இருந்து பெறவேண்டும். தீயணைப்புத்துறை தடையின்மை சான்றும் அவசியம். மின் இணைப்பு வழங்கப்படுவதை குறிக்கும் கடிதம் மின்சார துறையிடம் இருந்தும் பெறவேண்டும்.
களிமண் சிலைகள் மட்டுமே வைக்க வேண்டும். எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு கூடாரம் அமைக்கக்கூடாது. சிலையின் உயரம் அதன் பீடம் மற்றும் அடித்தளம் சேர்த்து 10 அடிக்கும் மிகாமல் இருக்க வேண்டும். மருத்துவமனைகள், கல்விநிலையங்கள், பிற வழிபாட்டு தலங்கள் அருகில் சிலைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். காலை 2 மணி நேரம் மற்றும் மாலை 2 மணி நேரம் மட்டுமே ஒலிபெருக்கியை பயன்படுத்த வேண்டும். கூம்புவடிய ஒலிபெருக்கியை பயன்படுத்தக் கூடாது.
சிலைகள் வைக்கப்படும் இடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சாதி தலைவர்கள் புகைப்படங்களுடன் பேனர்கள் வைக்கக்கூடாது. அப்பகுதியில் சிலை அமைப்பாளர்கள் சார்பில் பாதுகாப்பு பணிக்கு குறைந்தது, 2 பேராவது 24 மணிநேரமும் இருக்கவேண்டும். சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது பட்டாசு பயன்படுத்த கூடாது. சிலையில் உள்ள பூ மற்றும் அலங்கார பொருட்கள் அனைத்தும் சிலையை கரைப்பதற்கு முன், அகற்றப்பட வேண்டும். ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட வழிதடம் வழியாக செல்லவேண்டும். சூரியன் மறைவதற்குள் அனைத்து சிலைகளும் கரைக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் அமைதியாக விழா மற்றும் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், என கலெக்டர் கூறினார்.
















No comments