ஒரு நாள் போட்டிகளில் இருந்து சச்சின் திடீர் ஓய்வு 23-12-2012 இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், ஒரு நாள் போட்...
ஒரு நாள் போட்டிகளில் இருந்து சச்சின் திடீர் ஓய்வு
23-12-2012
இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று காலை அறிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் ஜாம்பவான் ஆஸ்திரேலியாவின் பிராட்மேனுக்கு அடுத்த நிலையில் உள்ளவர் என்று புகழப்பட்டவர் சச்சின். ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளார். அதிக ரன்கள், அதிக செஞ்சுரி, ஒருநாள் போட்டியில் முதல் இரட்டை சதம் என இவரது சாதனை பட்டியல் நீள்கிறது.
இதுவரை 463 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 18,426 ரன்கள் எடுத்துள்ளார். இரண்டுமே உலக சாதனையாக உள்ளன. கடந்த 23 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் ஆடி வரும் சச்சின், 49 செஞ்சுரிகள் அடித்துள்ளார். இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்த சச்சின், கடந்த ஓராண்டாகவே பார்மில் இல்லை. டெஸ்ட் போட்டிகளிலும் சரியாக விளையாடவில்லை. இதையடுத்து அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். சச்சின் ஓய்வு பெறக் கூடாது. விளையாட்டில் ஏற்றத் தாழ்வு சகஜம் என்று பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பு வாதங்கள் பரபரப்பாக நிலவினாலும், ஓய்வு பற்றி சச்சின் எதுவும் கூறாமல் அமைதி காத்து வந்தார்.
மேலும், இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணியுடன் விளையாட ஆர்வமாக இருப்பதாக கூறினார். இந்நிலையில், டி20 மற்றும் ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடும் இந்திய வீரர்கள் தேர்வு இன்று நடக்கிறது. இதில் சச்சின் இடம்பெறுவாரா மாட்டாரா என்று ரசிகர்கள் காத்திருந்தனர். பரபரப்பான நிலையில், ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக சச்சின் இன்று காலை திடீரென அறிவித்தார். இதுகுறித்து சச்சின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளேன். உலக கோப்பை வெல்லும் அணியில் இருக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
2015ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய நலம் விரும்பிகள் அனைவருக்கும் நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன். இத்தனை ஆண்டுகள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்கு ஆதரவு அளித்து வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு சச்சின் தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவு குறித்த கடிதத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சச்சின் அனுப்பியுள்ளார். அவரது கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது
No comments