இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக்கோப்பை முதல் அரையிறுதி போட்டி நேற்று மழையின் காரணமாக பாதிக்கப்பட்டு இன்று தொடர்ந்து நடைபெற்றத...
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக்கோப்பை முதல் அரையிறுதி போட்டி நேற்று மழையின் காரணமாக பாதிக்கப்பட்டு இன்று தொடர்ந்து நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.
எளிமையான இலக்கை வென்றுவிடலாம் என்ற கனவோடு பேட்டிங்கை துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தது நியூசிலாந்து அணி. ஆட்டத்தின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது ஓவர்களில் ரோகித் சர்மா(1), விராட் கோலி (1), லோகேஷ் ராகுல்(1) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து 10 வது ஓவரில் ஆட்டமிழந்தார். முதல் 10 ஓவர்களிலேயே முக்கியமான 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட் மற்றும் ஹார்டிக் ஆகியோரும் விக்கெட்டை இழந்து வெளியேறினர். இதனால் ரசிகர்கள் நம்பிக்கையை இழந்து மிகுந்த வருத்ததில் இழந்த நிலையில் அவர்களை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் டோனியும், ஜடேஜாவும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி மீண்டும் நம்பிக்கையை கொடுத்தனர்.
ஒரு கட்டத்தில் 92 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை டோனி, ஜடேஜா ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்து மீட்டது.
இறுதியில் வெற்றிக்காக போராடிய ரவீந்திர ஜடேஜா 77 ரன்களும், டோனி 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
240 ரன்களை இலக்காகக்கொண்டு விளையாடிய இந்திய அணி 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முடிவில் இந்தியாவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
2015-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பிறகு 2-வது முறையாக அரையிறுதியில் இந்தியா தோல்வி அடைந்தது. இரண்டாவது முறையாக உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றது.
No comments