நாகர்கோவில் நகரில் வாகன பெருக்கம் அதிகரித்தாலும், அவைகள் சென்று வரும் அளவுக்கு விசாலமான சாலைகள் இல்லை. குறுகிய சாலைகள் மட்டுமின்றி அதில...
நாகர்கோவில் நகரில் வாகன பெருக்கம் அதிகரித்தாலும், அவைகள் சென்று வரும் அளவுக்கு விசாலமான சாலைகள் இல்லை.
குறுகிய சாலைகள் மட்டுமின்றி அதில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடக்கிறது.
குறிப்பாக அண்ணா பஸ் நிலைய சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பது வழக்கம். இதுபோல ஒழுகினசேரி, கட்டையன்விளை, வடசேரி காசிவிஸ்வநாதர் ஆலயம் சமீபம், வெட்டூர்ணிமடம் சாலை பகுதிகளில் இந்த விபத்துக்கள் நடக்கிறது.
இந்த விபத்துக்களில் அண்ணா பஸ் நிலையம் அருகே தாய்-மகள் பலியான சம்பவமும், கட்டையன்விளையில் நடந்த சம்பவமும் நகர மக்களை பரிதாபத்தில் ஆழ்த்தியது.
இதுபோன்ற மரணங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து நாகர்கோவில் நகரில் மட்டும் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அங்கு விபத்துக்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி ஆய்வு செய்யும் படி அதிகாரிகளுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டார்.
இதற்காக ஆர்.டி.ஓ. விஷ்ணு சந்திரன், நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர் சரவண குமார், வருவாய் அதிகாரிகள், போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசாரை கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினர் இன்று (17-07-2019) நாகர்கோவில் பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கும் 7 இடங்களை கண்டறிந்து ஆய்வு நடத்தினர். இதில் முதல் கட்டமாக நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள பள்ளி முன்பு ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது பள்ளி முடிந்து மாணவிகளை அழைத்து செல்ல பெற்றோர் சாலைகளை அடைத்தபடி நிற்பதால் விபத்து ஏற்படுவதாகவும், இதற்கு மாற்று ஏற்பாடு என்ன செய்யலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டது.
இதில் பள்ளி மாணவிகளை அழைத்து செல்ல வரும் அவர்களின் பெற்றோரை கணேசபுரம் சாலையில் நிற்குமாறு அறிவுறுத்தவும். அந்த பகுதி வரை மாணவிகள் சாலையின் நடைபாதை வழியாக செல்லவும் அறிவுறுத்தவும் திட்டமிடப்பட்டது.
இத்திட்டம் எந்த அளவுக்கு பலன் அளிக்கும் என்பதை தொடர்ந்து ஆய்வு செய்யவும் அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதுபோல குறுகலான சாலைகள், அவற்றை விரிவு படுத்த வழி உள்ளதா? எந்த சாலைகளை ஒரு வழிப்பாதையாக மாற்றலாம்? ஆகியவை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தினர்.
இதில் அவர்கள் கண்டறிந்த தகவல்களை தொகுத்து அறிக்கையாக தயாரித்து கலெக்டரிடம் வழங்க உள்ளனர். அந்தஅறிக்கை கிடைத்த பின்பு கலெக்டர் விவாதித்து உரிய நடவடிக்கை எடுப்பார்.அதன்பிறகு நகரில் விபத்துக்கள் குறையும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments