குளச்சல் துறைமுக பகுதியை சேர்ந்தவர் லூர்தய்யா (வயது 74). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருடைய மனைவி மேரி ஜோஸ்பின். ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர...
குளச்சல் துறைமுக பகுதியை சேர்ந்தவர் லூர்தய்யா (வயது 74). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருடைய மனைவி மேரி ஜோஸ்பின். ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 2 பேரும் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வருகின்றார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் மகன்கள் 2 பேரும் குடும்பத்துடன் ஊர் திரும்பினர்.
இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை லூர்தய்யாவின் பேரக்குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா நடைபெற்றது. பின்னர் அனைவரும் வீட்டை பூட்டி விட்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர்.
நேற்று மாலையில் அவர்கள் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் கீழ் தளத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை, ரூ.27 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது.
மேலும், வீட்டின் மேல் தளத்தில் உள்ள அறையில் இருந்த விலை உயர்ந்த செல்போன் ஒன்றும் திருட்டுபோய் இருந்தது.
லூர்தய்யா வீட்டில் உள்ள அனைவரும் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகை-பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வேல்கனி, சப்-இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. துப்பு துலக்க மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. கொள்ளையர்கள் கதவை உடைக்க பயன்படுத்திய இரும்பு கம்பியும் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
No comments