ரூ.28 ஆயிரம் கோடி நான் சம்பாதித்தது: கடலை வியாபாரி பேட்டி 05-01-2013 தாராபுரம் அருகே உள்ள உப்புத்துறை பாளையத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். நிலக...
ரூ.28 ஆயிரம் கோடி நான் சம்பாதித்தது:
கடலை வியாபாரி பேட்டி
05-01-2013
தாராபுரம் அருகே உள்ள உப்புத்துறை பாளையத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். நிலக்கடலை வியாபாரி. நிலக்கடலை ஆலையும் நடத்தி வருகிறார். தனியார் வங்கி ஒன்றில் ரூ.28 ஆயிரம் கோடி மதிப்புள்ள அமெரிக்க கடன் பத்திரங்களை கொடுத்து பணமாக மாற்ற முயன்றபோது வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை மடக்கினர். அவரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து நேற்று இரவு வரை விசாரணை நடத்தினார்கள்.
ராமலிங்கத்திடம் இந்த பணம் எப்படி வந்தது? அமெரிக்க கடன் பத்திரங்கள் 5-ம் உண்மையானதுதானா? அவை எங்கு வாங்கப்பட்டது. இந்த வருமானத்திற்கான ஆதாரங்கள் என்ன துருவி துருவி அதிகாரிகள் விசாரித்தனர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 5 அமெரிக்க கடன் பத்திரங்களும் அதன் உண்மை தன்மையை அறிய டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ராமலிங்கத்திடம் பறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்க கடன் பத்திரங்கள் உண்மையானதா? போலியானதா? என்று தெரிய ஒரு வாரம் காலம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் விசாரணைக்கு பிறகு ராமலிங்கத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் இரவு 10 மணிக்கு விடுவித்தனர். வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ரூ.28 ஆயிரம் கோடி மதிப்புள்ள அமெரிக்க கடன் பத்திரங்கள் உண்மையானது. போலியானது அல்ல. அவை என்னுடைய உண்மையான சம்பாத்தியத்தில் வாங்கியது. இதில் மாற்று கருத்து இல்லை. என்னிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் பலர் துருவி துருவி விசாரித்தார்கள். அவர்களிடம் நான் தெளிவாக விளக்கம் அளித்துள்ளேன். மறுபடியும் விசாரணைக்கு வரச்சொல்லி இருக்கிறார்கள். விசாரணை முடிந்த பிறகு நான் விரிவாக உங்களிடத்தில் விளக்குகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
No comments