Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

கலைகள்

நாட்டுப்புறக் கலைகள்
நாட்டுப்புற வழக்காறுகளில் நாட்டுப்புற இலக்கியம் தவிர்த்த மற்ற அனைத்து வழக்காறுகளையும் நாட்டுப்புறக் கலைகளுக்குள் அடக்கம் செய்யலாம். பின்பு அதனை மூன்று வகைகளாகப் பகுத்து அறியலாம். அவை,
1) நாட்டுப்புறப் பழக்கங்கள் (Folk Practices) 
2) நாட்டுப்புறக் கலைகள் (Folk Arts) 
3) நாட்டுப்புற அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் (Folk Science)
வாழ்க்கை முறைகளின் கூட்டுச் சேர்க்கைதான் பண்பாடு என்ற ஒன்றை உருவாக்குகின்றது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் சடங்குகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் இவை தாம் அச்சமுதாயத்தின் பண்பாட்டின் அடையாளத்தைக் காண வழி வகுக்கின்றன. சமுதாயத்தின் பழக்கங்கள் என்பனவற்றுள்,
1) நம்பிக்கைகள்
2) வழக்கங்கள்
3) சடங்குகள்
4) விழாக்கள்
5) விளையாட்டுகள்
போன்றவை அடங்கும்.
  • நம்பிக்கைகள்
  • நம்பிக்கைகள் மக்களால் உருவாக்கப்பட்டு, அம்மக்களின் சமுதாயத்தால் பாதுகாக்கப் படுகின்றன. மனிதனின் தன்னல உணர்வும் சமுதாய உணர்வுமே நம்பிக்கைகளை வளர்த்து வருகின்றன. நம்பிக்கைகள் பெரும்பாலும் அச்ச உணர்வின் அடிப்படையில் அமைகின்றன. இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்கள் நடக்கின்ற போது மனித மனம் அதற்கு ஒரு காரணத்தைப் படைக்கின்றது. அதுவே நாளடைவில் நம்பிக்கையாக மாறிவிடுகின்றது. சகுனங்கள் பார்ப்பதும் இந்த நம்பிக்கைக்குள் அடங்கும்.
  • நம்பிக்கையின் வகைகள்
  • நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைகள் கணக்கற்றவை. அவற்றில் சில,
    1) குழந்தை பற்றிய நம்பிக்கைகள்
    2) பருவமடைதல் பற்றிய நம்பிக்கைகள்
    3) மழை பற்றிய நம்பிக்கைகள்
    4) நட்சத்திர நம்பிக்கைகள்
    5) கடவுள் பற்றிய நம்பிக்கைகள்
    6) உணவு, ஆடை, அணிகலன்கள் பற்றிய நம்பிக்கைகள்
    7) மரணம் பற்றிய நம்பிக்கைகள்
    8) கனவு பற்றிய நம்பிக்கைகள்
  • சகுனங்கள்
  • 1) நல்ல சகுனம்
    2) கெட்ட சகுனம்
    3) பல்லி சகுனம்
    என்பனவற்றைக் கூறலாம்.
  • வழக்கங்கள்
  • நாட்டுப்புற மக்களிடையே சில வழக்கங்கள் நடைமுறையில் இன்றளவும் காணப்படுகின்றன. அவை பின்வரும் நம்பிக்கைகள் சார்ந்தவை:
    1) பெண்களுக்கு முழங்கால்வரை முடி வளர்ந்திருந்தால் தனது கணவனை விரைவில் இழப்பாள்.
    2) செவ்வாய்க்கிழமையன்று மயிர் வெட்டினால் தரித்திரம் வரும்.
    3) அகன்ற நெற்றியுடையவர்கள் அறிவாளிகள்.
    4) ஆண்களுக்கு வலது கண் துடித்தல் நல்லது.
    5) ஆண்களுக்கு இடது கண் துடித்தல் கெட்டது.
    6) பெண்களுக்கு இடது கண் துடித்தல் நல்லது.
    7) ஒருவர் தும்மும்போது ‘நீண்ட நாள் வாழ்க', ‘நூற்றாண்டு வாழ்க' எனக் கூறுவர்.
    8) மறைவிடத்தில் மச்சம் இருப்பின் நல்லது.
    9) திருமண நேரத்தில் மகன் அருகில் தாய் செல்லக் கூடாது.
    10) சுபகாரியங்களை முதல் பிறைநாளன்று செய்யக் கூடாது.
  • சடங்குகள்
  • நாட்டுப்புற மக்கள் தங்களது வாழ்வில் இன்பம், துன்பம் என்ற எல்லா நிகழ்ச்சிகளிலும் சடங்கு செய்தல் என்பது முக்கியம். திருமணம், மரணம், குழந்தைப் பேறு, தெய்வ வழிபாடு என்று எல்லாவற்றிலும் சடங்குகள் இடம்பெறுகின்றன.
    சான்று : திருமணச் சடங்கு
    திருமணம் என்றால் பந்தல் போட்டு, அனைவருக்கும் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பர். நலுங்கு செய்தல், திருநீற்றுக் காப்பு இடல், அம்மி வலமாக வந்து அரசாணி முன்பு தாலி கட்டுதல் முதலியன சடங்குமுறைகள் ஆகும்.
  • விழாக்கள்
  • விழாக்கள் பெரும்பாலும் மதச் சார்புடையனவாகவோ, தொழில் சார்புடையனவாகவோ இருக்கும். தொழில் சார்புடைய விழாக்கள் தொழில் சிறப்படைய வேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டாடப் படுகின்றன. சமயச் சார்புடைய விழாக்களில் தெய்வ வழிபாடு கலந்திருக்கும்.
    1) தமிழ் வருடப் பிறப்பு
    2) சித்திரா பௌர்ணமி
    3) வைகாசி விசாகம்
    4) பிட்டுத் திருவிழா
    5) விநாயக சதுர்த்தி
    6) தீபாவளி
    7) கார்த்திகை தீபம்
    8) நவராத்திரி
    9) பொங்கல் விழா
    நாட்டுப்புறத் தெய்வங்களோடு தொடர்புடைய விழாக்கள் என்று முனைவர் க. காந்தி சிலவற்றைக் குறிப்பிடுகிறார். அவை :
    1) தேர்த் திருவிழா
    2) செடல் போடும் திருவிழா
    3) தீமிதி உற்சவம்
    4) கம்பம் திருவிழா
    5) மொந்தையன் திருவிழா
    6) ஊரணிப் பொங்கல்
    7) மயானக் கொள்ளை
    8) காத்தவராயன் கழுவேற்றம்
    போன்றவைகளாகும்.
  • விளையாட்டுகள்
  • நாட்டுப்புற மக்களின் வாழ்வியலை அறிவதற்கு விளையாட்டுகளும் பெரிதும் உதவுகின்றன. இவ்விளையாட்டுகளை ஐந்து வகையாகப் பிரிக்கின்றனர்.
    1) சிறுவர் விளையாட்டு
    சிறுவர்கள் மட்டும் கூடி விளையாடுவது.
    சான்று : பம்பர விளையாட்டு, தேர் விளையாட்டு.....
    2) சிறுமியர் விளையாட்டு
    சிறுமியர்கள் மட்டும் கூடி விளையாடுவது.
    சான்று : பூப்பறிக்க வருகிறோம், பூசணிக்காய் விளையாட்டு.
    3) சிறுவர் சிறுமியர் விளையாட்டு.
    இருபாலாரும் கூடி விளையாடுவது.
    சான்று : நொண்டி, நிலாப் பூச்சி, சாட்டு பூட்டு.
    4) மகளிர் விளையாட்டு.
    சான்று : பல்லாங்குழி, தட்டாங்கல், தாயம்.
    5) ஆடவர் விளையாட்டு.
    சான்று : சடுகுடு, பதினைந்தாம்புலி, உறியடி விளையாட்டு, சேவல் கட்டு, எருது கட்டு.
    3.3.2 நாட்டுப்புறக் கலைகள்
    நாட்டுப்புற மக்களின் கலைகளை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். அவை,
    1) நிகழ்த்து கலைகள் (Performing Arts) 
    2) நிகழ்த்தாக் கலைகள் (Non - Performing Arts)
  • நிகழ்த்து கலைகள்
  • நிகழ்த்து கலைகளை மேலும் இரண்டாகப் பிரித்து,
    1) சமூகச் சார்புக் கலைகள்
    2) சமயச் சார்புக் கலைகள்
    எனலாம். இந்நிகழ்வுகள் குறிப்பிட்ட கலைஞர்களால் நிகழ்த்தப்படுவன.
  • நாட்டுப்புற நாடகம்
  • விழாக்களின் போது நடத்தப்படும். பெரும்பாலும் இரவில் தொடங்கி விடிய விடிய நடைபெறும். வள்ளி் திருமணம் போன்ற நாடகங்கள் நாட்டுப்புற மக்களிடையே சிறப்புற்றவை. இந் நாடகங்கள் தற்காலச் சமுதாயத்திற்கு ஏற்பவும் வசனங்களில் சில மாற்றங்களை உள்வாங்கிப் பேசும். இதைப் பெரும்பாலும் நகைச்சுவைப் பகுதியில் காணலாம். நாட்டுப்புற நாடகக் கூறுகளாகத் தற்போது சமூக விழிப்புணர்வு, தேர்தல் பிரச்சாரம், மக்கள் தொகைக் கட்டுப்பாடு போன்ற கருத்துகளும் உள்ளடங்கியுள்ளன எனலாம்.
  • நாட்டுப்புற இசை
  • நாட்டுப்புற இசையினை வில்லுப்பாட்டில் காணமுடியும். இதில் வில்லுடன், இசைக் கருவிகளாக உடுக்கு, குடம், தாளம், கட்டை என்பனவற்றையும், பம்பை, உறுமி, தக்கை, துந்துபி என்ற நான்கு கருவிகளையும் சேர்த்து எட்டு வகையான பக்கக் கருவிகள் பயன்படுத்தப் படுகின்றன. இந்த வில்லுப்பாட்டும் தற்பொழுது சமுதாயக் கருத்துகளை மக்களிடையே கொண்டு சேர்க்கப் பயன்படுத்தப் படுகின்றது.
  • நாட்டுப்புற நடனம்
  • நாட்டுப்புறவியலில் நடனம் என்று குறிக்காமல் ஆட்டம் என்று தான் வழங்கப்படுகிறது. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கணியான் ஆட்டம் போன்ற ஆட்டங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
  • கூத்து
  • கூத்து என்பது பழமையின் சின்னமாக, பண்பாட்டின் எச்சமாக விளங்குகின்றது. தெருக்கூத்தின் வளர்ச்சிதான் நாடகம் என்றும் கூறலாம்.
  • கூத்தின் வகைகள்
  • 1) பாவைக் கூத்து,
    2) கழைக் கூத்து,
    3) தெருக்கூத்து
    எனப்படும்.
  • நிகழ்த்தாக் கலைகள்
  • இக்கலைகளை நாட்டுப்புற மக்களின் தொழில் சார்ந்த கலைகள் என்று தான் குறிப்பிட வேண்டும். இத்தொழில்கள், மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்டவை. கோயில்கள், தெய்வங்கள் இவற்றை அழகு படுத்துவதற்காகச் செய்யப்படுவன எனலாம்.
  • மண்பாண்டக் கலை
  • நாட்டுப்புற மக்களிடையே மண்பாண்டக் கலை மிகவும் சிறப்புப் பெற்றது. கலையழகுடன் கைத்திறனையும் காட்டி மண்பாண்டம் செய்வதையே பெரும் கலையாக்கிவிட்டனர். பல நிறங்களுடன், உருவ அமைப்பில் மாற்றமும் செய்து கலையழகுடன் பொருந்திய பொருட்களை உருவாக்குகின்றனர். கிராமங்களில் காணப்படும் ஐயனார் சிலைகள் இவர்களின் கைவண்ணத்திற்குச் சான்றாகும்.
  • பாய் பின்னுதல்
  • பாய் பின்னும் தொழில் நம்மிடையே பல தலைமுறையாக நடைபெற்று வருகிறது. பத்தமடைப் பாய் நெசவும், பனை ஓலையால் கூடை முடைதலும் கைத்தொழிலின் சிறந்த சான்றாகும்.
  • சிற்ப வேலைப்பாடு
  • மரத்திலும், உலோகத்திலும், கல்லிலும் சிற்பங்கள் செதுக்கப் படுகின்றன. கோவில் தேர்களில் அழகான சிற்பங்களைக் காணலாம். உலோகங்களில் தெய்வச் சிலைகளும், பாவை விளக்குகளும் செய்யப் படுகின்றன. உலோகத்தால் செய்வது போன்று கல்லிலும் சிற்பங்கள் செதுக்குவர்.
  • நாட்டுப்புற ஆடைகள்
  • நாட்டுப்புற மக்களின் ஆடைகள் பருத்தியால் ஆனவை, எளிமையானவை. ஆனால் வளர்ந்து வரும் நாகரிகத்திற்கு ஏற்ப அவர்களுடைய ஆடைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அப்படியென்றால் அவர்களுக்கென்ற தனிப்பட்ட அடையாளத்தை அங்கு எதில் காணலாம் என்றால், அம்மக்களின், நம்பிக்கை சார்ந்த சடங்குகளிலும், தெய்வ வழிபாடுகளிலும் காணலாம். அந்த நிகழ்வின் போது எவ்வகை ஆடை அணிகின்றனர், நிறம் என்ன? போன்றவற்றைக் கொண்டு அவர்களின் பண்பாட்டின் தனித் தன்மைகளை அறிய முடியும்.
    3.3.3 நாட்டுப்புற அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்
    இப்பகுதியில்,
    1) நாட்டுப்புற மருத்துவம்
    2) நாட்டுப்புறத் தொழில் நுட்பவியல்
    3) நாட்டுப்புறக் கட்டடக் கலை
    என்று மூன்று வகைகளைப் பார்க்கலாம்.
  • நாட்டுப்புற மருத்துவம்
  • நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவ முறைகளை நாட்டுப்புற மருத்துவம் என்கிறோம். நாட்டுப்புற மருத்துவத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை,
    1) மந்திர சமய மருத்துவம்
    2) இயற்கை மருத்துவம்
  • மந்திர சமய மருத்துவம்
  • இவ்வகை மருத்துவம் மந்திரம், சடங்கு போன்றவற்றோடு தொடர்பு உடையதாக இருக்கும்.நாட்டுப்புற மக்களின் மருத்துவ மந்திரச் சடங்குகள் மந்திரித்தல், திருநீறு போடல், கோடாங்கி கேட்டல், பார்வை பார்த்தல், நேர்த்திக் கடன் செய்தல், பேயோட்டல், செய்வினை செய்தல் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இந்த மருத்துவர்களை அம்மக்கள் பூசாரி, பேயோட்டி, பாம்புக்கடி மருத்துவர், எலும்பு முறிவு வைத்தியர், மந்திரவாதி, சாமியாடி, அருளாடி, நாட்டு வைத்தியர் எனப் பல பெயர்களால் அழைக்கின்றனர். மக்களது நோயினைத் தீர்ப்பதற்கு மத மந்திரத்தைத் தழுவி நிற்பதனை மந்திர சமய மருத்துவம் (Magio - religious medicine)எனலாம்.
  • இயற்கை மருத்துவம்
  • மூலிகை, தாது போன்ற பொருட்கள், மருந்துகள் முதலியவற்றை இயற்கை நாட்டுப்புற மருத்துவம் என்பர். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உட்கொள்ளும் மருந்து, வெளிப்பூச்சு மருந்து என இருவகையுண்டு. இயற்கை நாட்டுப்புற மருத்துவம் மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே உள்ளது. பண்டைய மனிதனின் மருத்துவ அறிவை, நம்பிக்கையை இதன் மூலம் அறியலாம்.
    சான்று : மஞ்சள் காமாலை நோய்
    1) கீழாநெல்லி, மஞ்சள் கரிசலாங்கண்ணியை அரைத்து மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பால்சோறு சாப்பிட வேண்டும்.
    2) சித்திர மூலம் மஞ்சள் காமாலையைக் குணமாக்கும்.
  • நாட்டுப்புறத் தொழில் நுட்பவியல்
  • நாட்டுப்புற மக்கள் மரபு வழியாகக் கடைப்பிடித்து வரும் முறைகளைக் கையாண்டு பொருட்களைத் தயாரிக்கின்றனர். அந்தந்த இடத்திலுள்ள மூலப்பொருள்களைக் கொண்டு கைவினைப் பொருட்களாகக் கலை அம்சம் கொண்ட பொருட்களை மட்டுமின்றி, மனித வாழ்வுக்குப் பயன்படுத்தும் செக்கு, கலப்பை, மாட்டுவண்டி போன்ற பொருட்களையும் தயாரித்து, அதிலும் அவர்களின் தொழில் நுட்பத்தை வெளிப்படுத்துகின்றர்.
  • கட்டடக் கலை
  • நாட்டுப்புறக் கட்டடக் கலையில் மரபு வழிப்பட்ட திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. கட்டடம் கட்டுபவரே வீட்டின் அமைப்பைத் தீர்மானிப்பார். அவ்வீட்டின் அமைப்பு பெரும்பாலும் அப்பகுதியிலுள்ள மற்ற வீடுகளின் அமைப்பு போன்றிருக்கும். முன்னோர் கட்டிய கட்டட அமைப்பின் மாதிரியாகவும் இருக்கும். நாட்டுப்புறக் கட்டடக் கலையில் பயன்படுத்தும் பொருட்கள், கருவிகள், தொழில் நுட்ப முறைகள் மற்ற கட்டடக் கலைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டுப்புற மக்கள் வசிக்கும் வீடுகளைத் தரையமைப்பு, கூரை ஆகியவற்றின் அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தி உள்ளனர்.
    1) நீண்ட சதுரத் தரை அமைப்பும் மட்டமான கூரையும்
    2) நீண்ட சதுரத் தரை அமைப்பும் சாய்வான கூரையும்
    3) வட்டமான தரை அமைப்பும் கூம்பு வடிவக் கூரையும்.
     Credit: TVU



    வரலாற்று தகவல்கள்
    அறிவியல் தகவல்கள்
    ஆன்மிகம்
    பொது அறிவு
    மகளிர் ஸ்பெஷல்