குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் மரியஜான் (வயது 55). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். இவருடைய படகில் பு...
குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் மரியஜான் (வயது 55). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். இவருடைய படகில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எழில்நகரை சேர்ந்த தான்பகதூர் மகன் முத்து (19) மற்றும் நரேஷ் ஆகியோர் மீன்பிடி தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற மரியஜாண் படகு கடந்த 21-ம் தேதி கரை திரும்பியது. பின்னர் மீன்களை இறக்கி விற்றுவிட்டு படகை குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தியிருந்தார். படகில் முத்து, நரேஷ் ஆகிய இருவரும் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் முத்து சம்பவத்தன்று ஒரு வள்ளத்தில் கரைக்கு வந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் மீண்டும் படகிற்கு செல்ல இன்னொருவர் வள்ளத்தில் ஏறி சென்றார். முத்துவை விசைப்படகில் ஏற்றிவிட்டு வள்ளம் கரை திரும்பியது.
விசைப்படகில் இருந்த முத்து சிறிது நேரத்தில் தவறி கடலில் விழுந்ததாகவும், அதை விசைப்படகில் இருந்த நரேஷ் கவனிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மறுநாள் முத்துவை காணவில்லை என்று படகு உரிமையாளர் மரிய ஜானிடம், நரேஷ் கூறினார். அதைத்தொடர்ந்து முத்துவை மீனவர்கள் தேடினார்கள்.
அப்போது முத்துவின் உடல் படகுகளுக்கு இடையே மிதந்து வந்தது. இதுபற்றி மரிய ஜான் குளச்சல் கடலோர காவல்படை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விரைந்து வந்து, கடலில் தவறி விழுந்து உயிரிழந்த முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மீன்பிடித்தொழிலாளி முத்து கடலில் தவறி விழுந்தது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
















No comments