மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள பெரியகுளத்தில் குளிக்க சென்ற மாணவர் குளத்தில் மூழ்கி பலியானார். குளச்சல் காமராஜர் சாலையை சேர்ந்தவர் முகம்மது ...
மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள பெரியகுளத்தில் குளிக்க சென்ற மாணவர் குளத்தில் மூழ்கி பலியானார்.

குளச்சல் காமராஜர் சாலையை சேர்ந்தவர் முகம்மது ஷேக். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகன் ரிப்கான் அஹமது (வயது 18). நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் இஞ்சினியரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
நேற்று மாலை ரிப்கான் அஹமது நண்பர்களுடன் சேர்ந்து மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள பெரியகுளத்தில் உள்ள எழுத்திட்டான் பாறை பகுதியில் குளிக்க சென்றார்.
அப்போது ரிப்கான் பாறை பகுதியில் இருந்து குளத்தில் இறங்கும் போது எதிர்பாராதவிதமாக தவறி குளத்தில் விழுந்தார். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார். உடனே நண்பர்கள் குளச்சலில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
உறவினர்கள் அங்கு விரைந்து வந்து ரிப்கான் அகமதை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரிப்கான் அஹமது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments