பூதப்பாண்டி அருகே பைக் மீது டாரஸ் லாரி மோதி நடந்த விபத்தில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தார். சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதை கண்டித்து பொதுமக்கள் போ...
பூதப்பாண்டி அருகே பைக் மீது டாரஸ் லாரி மோதி நடந்த விபத்தில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தார். சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

குமரி மாவட்டம் அருமநல்லூர் புளியடி பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை. காலஞ்சென்ற இவரது மகன் சீனு (வயது 20). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.
சீனுவின் நண்பர் ஒருவரின் சகோதரி திருமணம், தடிக்காரன்கோணத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சீனு தனது பைக்கில் தடிக்காரன்கோணம் – பூதப்பாண்டி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
தோமையார்புரம் அருகே சென்று கொண்டிருக்கும்போது, அந்த வழியாக வந்த டாரஸ் லாரி பைக்குடன் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சீனு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து குறித்து அறிந்ததும் பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சீனுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்றனர்.
அப்போது, அந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விபத்து குறித்து அறிந்து வந்த சீனுவின் உறவினர்கள் ஏராளமானோர் சீனு உடலை எடுக்க விடாமல், சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர். அந்த வழியாக வந்த அரசு பஸ்கள் மற்றும் வாகனங்களையும் சிறை பிடித்தனர்.
விபத்து நடந்த சாலை, தற்போது குண்டும், குழியுமாக உள்ளது. நாகர்கோவில் மாநகராட்சிக்காக குடிநீர் குழாய் பதிக்கப்படு 3 ஆண்டுகள் வரை ஆகிறது. ஆனாலும் இந்த சாலை சீரமைக்கப்படவில்லை. இதுவரை 15 பேர் பலியாகியுள்ளதாகவும், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே கலெக்டர் அல்லது அதிகாரிகள் வந்து உரிய உறுதிமொழி தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. வேணு கோபால் தலைமையில் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும், கனரக வாகனங்கள் அதிக பாரம் ஏற்றிவர தடை விதிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து 4 நேரமாக நடந்த பொதுமக்கள் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் இறந்த சீனுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
No comments