மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் கடல் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால், கடலில் ராட்சத அலைகள் எழுகின்றன. கடியப்பட்...
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் கடல் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால், கடலில் ராட்சத அலைகள் எழுகின்றன.

கடியப்பட்டணம், புனித பாத்திமா தெருவில் அமைக்கப்பட்டுள்ள அலை தடுப்பு சுவரை தாண்டி அலைகளின் நீர் உள்புகுந்து வருகிறது. இதனால் மேற்கு பகுதியில் கட்டுமரங்கள் நிறுத்துமிடத்தில் மணலரிப்பு ஏற்பட்டதால் மீனவர்கள் வள்ளம், கட்டுமரங்கள் ஆகியவற்றை மேடான பகுதியில் கொண்டு சென்றனர்.
தொடர்ந்து ராட்சத அலைகள் எழுந்து வருவதால், அங்கு அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு கற்கள் சரிந்து கடலில் விழுந்தன. சூறைக்காற்று மற்றும் அலைகளின் சீற்றம் அதிகமாக இருப்பதால், மீன்பிடிக்க செல்லும் வள்ளங்கள் கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் மணற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இது குறித்து கடியப்பட்டணம் மீனவர்கள் கூறியதாவது:- கடல் சீற்றத்தின் போது கடியப்பட்டணம் பாத்திமா தெரு கடுமையாக பாதிக்கப்படுகிறது. இங்கு சுமார் 300 வீடுகள் உள்ளன. இங்கு 190 மீட்டர் தூரத்திற்கு தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு உள்ளது.
கடல் சீற்றத்தில் தூண்டில் வளைவு கற்கள் பெயர்ந்து கடலில் சரிந்து விழுந்துள்ளது. மேலும் 150 மீட்டருக்கு தூண்டில் வளைவை நீட்டியிருந்தால் தான் கடல் சீற்றத்தில் இருந்து வீடுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாக்க முடியும், எனக் கூறினர்.
















No comments