கொரோனா பிரச்சினையால் தேர்வு எழுத முடியாமல் போன எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். ஆனால் கல்லூரிகளில் கடந்த செமஸ்டர...
கொரோனா பிரச்சினையால் தேர்வு எழுத முடியாமல் போன எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். ஆனால் கல்லூரிகளில் கடந்த செமஸ்டர் தேர்வுகள் தள்ளிப்போன நிலையில் அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறதோ? என மாணவர்கள் தவித்து வந்தனர்.

அவர்களுக்கு ஜாக்பாட்டாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த செமஸ்டர் தேர்வுகளில் ஆல்பாஸ் செய்ததோடு மட்டுமின்றி அரியர் வைத்திருந்த மாணவர்களையும் ஆல்பாஸ் செய்து திக்குமுக்காட வைத்து விட்டார்.
இந்த நிலையில் திருச்சி தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்த எடமலைப்பட்டி கிராப்பட்டி பகுதியை சேர்ந்த மாணவர் சஞ்சய் நேரு (23) அரியர்களில் இருந்து தப்பி பிழைத்தது பற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது:-
நான் மெட்ரிக்கில் 10-ம் வகுப்பு தேர்வில் 427 மதிப்பெண்களும், பிளஸ்-2 தேர்வில் 905 மதிப்பெண்களும் எடுத்தேன். என்ஜினீயரிங் பாடங்கள் எதுவும் புரியவில்லை. மனப்பாட கல்வியால் பயன் இல்லை.
சி.பி.எஸ்.இ. படித்த மாணவர்கள் எளிதில் புரிந்து கொண்டனர். இதனால் படிப்பில் எனக்கு ஆர்வம் போய்விட்டது. இடைநின்று விடலாமா? என யோசித்து கொண்டிருந்தேன். ஆனால் பெற்றோர் டிகிரி வேண்டும் என கூறிவிட்டனர்.
முன்பெல்லாம் அரியர்களை தாங்கள் விரும்பும் நேரத்தில் எழுதிக்கொள்ளலாம். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. முதலாம் ஆண்டு அரியர்களை எழுதி தேர்ச்சி பெற்றால் தான் 4-ம் ஆண்டுக்கு அனுப்பி வைப்போம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இதனால் வேறு வழியில்லாமல் 23 அரியர் பாடங்களுக்கும் கட்டணம் செலுத்தினேன்.
இந்தநிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எனது அரியர்களை எல்லாம் பாஸ் செய்து அறிவித்துள்ளார். இது எல்லையில்லா மகிழ்ச்சியை அளித்துள்ளது. கொரோனாவுக்கு மிக்க நன்றி.
அரியர் எழுதுவது ஏழை மாணவர்களுக்கு பொருளாதார சுமையை தருகிறது. முதலில் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பின்னர் மறுமதிப்பீடு கேட்க ரூ.150 செலுத்த வேண்டும். பாஸ் ஆகும் மதிப்பெண் எடுத்திருந்தால் தவறுகளை சுட்டிக்காட்டி மீண்டும் அனுப்ப ரூ.450 செலவழியும்.
ஆகையினால் இந்த ஆல்பாஸ் முடிவு என்னை போன்ற மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்கள் வகுப்பில் 12 மாணவ -மாணவிகள் உள்ளனர். இவர்களில் ஒரு மாணவியை தவிர்த்து அனைவரும் அரியர் வைத்திருந்தோம். இப்போது அனைவரும் தேர்ச்சி பெற்று விட்டோம் என்றார்.
No comments