குமரி மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் பஸ்கள் ஓடுமா? என்பது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழகத்தில்...
குமரி மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் பஸ்கள் ஓடுமா? என்பது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களைக் கொண்டு இயங்கும் என்றும், சனிக்கிழமை உள்பட வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
குமரி மாவட்டத்திலும் நாளை முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மேலும் அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வந்து செல்ல போக்குவரத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே குமரி மாவட்டத்தில் நாளை முதல் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுமோ? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசு தரப்பில் பொதுமக்களுக்கான பஸ் போக்குவரத்தை இயக்குவது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக்கழக உயர் அதிகாரிகள் கூறும்போது:- தமிழக அரசு அனைத்து அரசு அலுவலகங்களையும் நாளை முதல் செயல்பட அறிவுறுத்தி உள்ளது. அரசு போக்குவரத்துக்கழக அலுவலகத்தையும் இயக்க உத்தரவிட்டுள்ளது. அரசின் உத்தரவின்படி அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக அலுவலக பணியாளர்கள், பணிமனை தொழில்நுட்ப ஊழியர்கள் பணிகளை மேற்கொள்ள வரவழைக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் பஸ் போக்குவரத்தை தொடங்குவது குறித்து அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அதனால் பஸ்களின் டிரைவர், கண்டக்டர்களை பணிக்கு வருமாறு அழைக்கப்படவில்லை என்றனர்.
No comments