மணவாளக்குறிச்சி ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தும் மர்ம விலங்கை பிடிக்க வனத்துறையினர் 6 இடங்களில் கேமரா அமைத்து இருந்தனர். இதில் ...
மணவாளக்குறிச்சி ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தும் மர்ம விலங்கை பிடிக்க வனத்துறையினர் 6 இடங்களில் கேமரா அமைத்து இருந்தனர். இதில் மரநாயின் உருவம் சிக்கி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி, வாகனங்களின் இரச்சலின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் காட்டு விலங்குகளின் நடமாட்டம் ஊருக்குள் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் மணவாளக்குறிச்சி, பிள்ளையார்கோவில் பகுதியில் சிலுவைமுத்து என்பவர் வீட்டில் 2 ஆடுகளை கடந்த 18-ம் தேதி மர்ம விலங்கு ஒன்று கடித்து குதறியுள்ளது. இதில் ஆடுகள் பலியாயின.
இதைதொடர்ந்து சிலுவைமுத்து மணவாளக்குறிச்சி போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் வேளிமலை, பூதப்பாண்டி வனத்துறையினர் விரைந்து வந்து இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர். அங்கு தரையில் பதிந்த மர்ம விலங்கின் கால் தடங்களை ஆய்வு செய்தனர்.
பின்னர் கால் தடங்களை புகைப்படம் எடுத்து ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த அறிக்கை வந்த பிறகுதான் அது என்ன விலங்கு என அடையாளம் காணமுடியும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் மறுநாள் ஆண்டார்விளை பகுதியில் ஒரு வீட்டில் சுமார் 9 கிலோ எடையுள்ள வான்கோழியையும் மர்ம விலங்கு பிடித்து சென்றது. கடந்த 20-ம் தேதி இரவு தருவை நேசமணி என்பவர் வீட்டில் கட்டி போட்டிருந்த ஆட்டின் சப்தம் கேட்டு வீட்டினர் கதவை திறந்து பார்த்தபோது மர்ம விலங்கு ஒன்று தப்பி ஓடியதை பார்த்துள்ளனர்.
வேறொரு வீட்டில் ஆட்டை மோப்பம் பிடித்து வந்த மர்ம விலங்கு, ஆட்டை வீட்டினுள் கட்டியிருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றது. 21-ம் தேதி இரவு ஐ.ஆர்.இ. சாலையில் மர்ம விலங்கு, முயல் மற்றும் பழ உண்ணியை விரட்டி சென்றதை அப்பகுதினர் பார்த்து வனத்துறையினரிடம் தகவல் கூறியுள்ளனர். அந்த விலங்கு சிறுத்தை வடிவில் இருந்ததாக பொதுமக்கள் கூறினர்.
உடனே வனத்துறையினர் அந்த பகுதியில் 2 இடங்களில் 4 கூண்டுகளை வைத்தனர். விலங்கை பிடிப்பதற்காக கூண்டில் ஒரு ஆட்டை அடைத்து வைத்து, விடிய விடிய காத்திருந்தனர். தொடர்ந்து ஆடுகளை பிடிக்க வரும் மர்ம விலங்கு குறித்து அறிந்து கொள்ள பொதுமக்களும் விடிய விடிய கண்விழித்து காத்திருந்தனர்.
ஆனால் விலங்கு வராததால் ஏமாற்றடைந்தனர். இதையடுத்து வனத்துறையினர் திரும்பி சென்றனர். நேற்று முன்தினம் மீண்டும் மணவாளக்குறிச்சி வந்த வனத்துறையினர் பிள்ளையார்கோவில் சந்திப்பு பகுதியை சுற்றி 6 இடங்களில் கேமராக்களை பொருத்தினர்.
ஒருவேளை மர்ம விலங்கு கூண்டில் சிக்காமல் சென்றால் அது எந்த வகை விலங்கு என்பதை அறிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், கேமராவில் பதியும் விலங்கின் இனம் அடிப்படையில் மேல் நடவடிக்கை தொடரும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து நேற்று வனத்துறையினர் கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பெரிய உருவத்துடன் கூடிய மரநாய் ஒன்று தோப்புக்குள் இருந்து வெளியே வந்து உலாவிவிட்டு மீண்டும் சென்று மறையும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
இதையடுத்து இந்த மரநாயை பிடித்து காட்டில் கொண்டுவிடும் நடவடிக்கையை வனத்துறையினர் எடுத்துள்ளனர்.
பொதுமக்கள் சிலர் இதுபற்றி கருத்து கூறும்போது, பொதுவாக மரநாய்கள் பெரும்பாலும் எல்லா பகுதிகளிலும் காணப்படும் விலங்கு. அது ஆடுகளை முழுவதுமாக கொன்று சாப்பிடுமா என்ற சந்தேகம் உள்ளது. மரநாய் தான் அந்த ஆடுகளை கொன்று தின்றுள்ளதா என்பது சந்தேகமாக உள்ளது என தெரிவிக்கின்றனர்.
















இது மரநாய் இல்லை. இதன் பெயர் புனுகுப் பூனை (Civet Cat)
ReplyDeletehttps://en.m.wikipedia.org/wiki/Viverra
மரநாய் இப்படி இருக்கும்: https://en.m.wikipedia.org/wiki/Weasel