Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:
latest

Ads Place

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 1,200 கி.மீட்டரை மோட்டார் சைக்கிளில் கடந்து குமரிக்கு வந்த என்ஜினீயர்

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 1,200 கி.மீட்டரை கடந்து மோட்டார் சைக்கிளில் குமரிக்கு வந்த என்ஜினீயர், 4 நாட்கள் பிஸ்கெட் மட்டுமே சாப்பிட்ட...

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 1,200 கி.மீட்டரை கடந்து மோட்டார் சைக்கிளில் குமரிக்கு வந்த என்ஜினீயர், 4 நாட்கள் பிஸ்கெட் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்ததாக உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
வயிற்று பிழைப்புக்காக குமரியில் இருந்து சென்னை உள்பட பல மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து சென்ற தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கால் நிலைகுலைந்து போனார்கள். அதேபோல் என்ஜினீயர்கள் உள்ளிட்டோரும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பரிதவித்து வருகிறார்கள்.

கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதும், பொறுத்தது போதும், பொங்கியெழு என்ற மனநிலைக்கு வந்த தொழிலாளர்கள், என்ஜினீயர்கள் உள்ளிட்டோர் சொந்த ஊரான குமரிக்கு திரும்பும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். மேலும், 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பால் தெலுங்கானா மாநிலத்தில் பரிதவித்த குமரி என்ஜினீயர் ஒருவர் சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

நாகர்கோவில் அருகே பள்ளவிளை பகுதியை சேர்ந்தவர் வேலப்பன். இவருடைய மகன் ஜெயபிரகாஷ். 24 வயதுடைய இவர் கோவையில் என்ஜினீயரிங் படிப்பை முடித்தார். படிப்பை முடித்த கையோடு, ஒரு வருட பணிக்கு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் சேர்ந்தார்.
ஏப்ரல் மாதம் இந்த பணி முடிவடைவதாக இருந்தது. இதற்கிடையே கொரோனா பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் அவர் பரிதவித்தார். பணம் இருந்தாலும், உணவுக்காக அவர் சிரமப்பட்டார். இறுதியாக அவர் வேதனையின் உச்சத்துக்கே சென்றார். அதாவது, கடைசியாக 4 நாட்கள் தொடர்ந்து பசி, பட்டினியுடன் இருந்துள்ளார். கிடைத்த பிஸ்கெட், தண்ணீரை மட்டுமே அருந்தி உயிர் வாழும் பரிதாபத்திற்குரிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஊரடங்கு முடிவடைந்ததும், சொந்த ஊருக்கு செல்லலாம் என்ற மனநிலையில் இருந்த போது, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் அவர் மிகவும் நொந்து போனார். அதே சமயத்தில், எப்படியாவது சொந்த ஊருக்கு சென்று விட வேண்டும் என முடிவெடுத்த அவர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டார். மேலும், அங்குள்ள அதிகாரிகள் மூலம் அனுமதி சீட்டையும் முறைப்படி பெற்றார்.

பின்னர் 16-ம் தேதி துணிகர பயணத்தை மேற்கொண்ட அவர் ஆந்திர மாநில எல்லை, தமிழக எல்லையை கடந்தபடி, நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணிக்கு ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடிக்கு வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மடக்கினர். பின்னர் அவர் ஊரடங்கால் தனக்கு நேர்ந்த நிலையை வேதனையுடன் போலீசாரிடம் பரிமாறிக் கொண்டார். தொடர்ந்து சுகாதாரத்துறைக்கு போலீஸ் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு சுகாதார ஆய்வாளர் அய்யாகுட்டி, டாக்டர் ராஜேஷ் ஆகியோர் அங்கு விரைந்தனர்.
ஜெயபிரகாசுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. இதில் அவருக்கு உடல்நிலை சீராக இருந்தது தெரியவந்தது. இருந்தபோதிலும், 14 நாட்கள் வீட்டில் தனிமையாக இருக்கும்படி ஜெயபிரகாசை அதிகாரிகள் அறிவுறுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 1,200 கி.மீ. மோட்டார் சைக்கிளில் துணிகர பயணத்தை மேற்கொண்டு சொந்த ஊருக்கு என்ஜினீயர் திரும்பிய சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்பட்டது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்