நாகர்கோவில் நகரில் மையப்பகுதியான வடசேரியில் கனகமூலம் சந்தை செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி பராமரிப்பில் இருந்து வரும் இந்த சந்தையில் 260 க...
நாகர்கோவில் நகரில் மையப்பகுதியான வடசேரியில் கனகமூலம் சந்தை செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி பராமரிப்பில் இருந்து வரும் இந்த சந்தையில் 260 கடைகள் உள்ளன. இந்த சந்தைக்கு தினமும் ஆயிரக்கணக்கான வியாபாரிகளும், பொது மக்களும் வந்து செல்கின்றனர்.

நேற்று இரவு வியாபாரிகள் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றனர். நள்ளிரவு 1 மணி அளவில் சந்தையில் இருந்து வடசேரி பஸ் நிலையத்திற்கு சந்தைக்குள் நுழையும் வழியில் இருந்த தற்காலிக கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி அங்கிருந்த 3 கடைகளில் தீப்பற்றி எரிந்தது. மேலும் அந்த பகுதியே புகை மண்டலம் ஆனது.
அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் கடைகளில் தீ எரிவதை பார்த்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். 2 தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் தீயை மேலும் பரவ விடாமல் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
தீ விபத்தில் கண்ணப்பன், தங்கதுரை, ரமேஷ் ஆகியோரது கடைகள் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தது. கடையில் இருந்த வாழைதார்களும், பழங்களும் எரிந்து நாசமானது. கடையையொட்டி நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீ விபத்தில் சிக்கி கொளுந்து விட்டு எரிந்தது. தீ விபத்தில் லட்சக்கணக்கிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
தீ விபத்து குறித்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் வியாபாரிகளும் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
















No comments