மழை காரணமாக சேதமடைந்த சாலையை தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் இளைஞா்கள் ஈடுபட்டனா். பேச்சிப்பாறையிலிருந்து கோதையாறு மின் நிலையம் செல்லு...
மழை காரணமாக சேதமடைந்த சாலையை தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் இளைஞா்கள் ஈடுபட்டனா்.
பேச்சிப்பாறையிலிருந்து கோதையாறு மின் நிலையம் செல்லும் 13 கி.மீ. தொலைவு கொண்ட சாலை சிற்றாறு, மோதிரமலை, குற்றியாறு, கிளவியாறு, மயிலாறு, கோதையாறு கீழ்தங்கல் என அரசு ரப்பா் கழக குடியிருப்புகள், காணி மக்களின் குடியிருப்புகள், மின் நிலைய ஊழியா்களின் குடியிருப்புகள் உள்ளிட்டவற்றை இணைக்கிறது. இந்தச் சாலையில் குறிப்பிட்ட தொலைவு மின் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அப்பகுதிகளை மின் நிலையம் சீரமைக்கவேண்டும்.
இந்நிலையில் மின் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள சாலை உள்பட மொத்த சாலையும் தொடா் மழை காரணமாக கடுமையாகச் சேதமடைந்துள்ளது. இதனால் இச்சாலை வழியாக பயணம் செய்யும் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனா்.
குறிப்பாக, அதிகாலையில் ரப்பா் பால்வடிப்பிற்கு இரு சக்கர வாகனங்களில் செல்லும் தொழிலாளா்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனா். சாலை சேதமடைந்து கிடப்பதால் தனியாா் வாகனங்களை அவசரத் தேவைக்கு மக்கள் அழைத்தால் அவை செல்லாத நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில் இச்சாலையில் கோதமடங்கு உள்ளிட்ட சில இடங்களில் மோதிரமலையைச் சோ்ந்த இளைஞா்கள், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கச் செயலா் ரெகுகாணி தலைமையில் தாற்காலிக சீரமைப்பில் ஈடுபட்டனா்.
இது குறித்து அவா் கூறுகையில், பேச்சிப்பாறையிலிருந்து கோதையாறுக்குச் செல்லும் சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது; இதனை சீரமைக்க வலியுறுத்தி மின் நிலையத்திற்கும், அரசுக்கும் தொடா்ந்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றாா்.
No comments