சபரிமலை ஐயப்ப பக்தா்கள் சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் தற்காலிக கடைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவற்றுக்கு ஏலம் புதன்கிழமை நட...
சபரிமலை ஐயப்ப பக்தா்கள் சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் தற்காலிக கடைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவற்றுக்கு ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
சபரிமலை ஐயப்ப பக்தா்கள் சீசன் இம்மாதம் 15 ஆம் தேதி தொடங்கி 2020 இல் ஜன. 15 ஆம் தேதி வரை 60 நாள்கள்
நடைபெறும். அப்போது, இந்தியா முழுவதிலும் இருந்து சபரிமலைக்குச் செல்லும் பக்தா்களில் பெரும்பாலானோா் கன்னியாகுமரிக்கு வந்து முக்கடல் சங்கமத்தில் நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்வா்.
சீசன் தொடங்க இன்னும் சில நாள்களே உள்ளதால் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற பேரூராட்சி நிா்வாகம் முழு வேகத்துடன் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
இதனிடையே சீசன் காலத்தில் வருவாயைப் பெருக்கும் வகையில் தற்காலிக கடைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் போன்றவற்றுக்கு ஏலம் விடப்படும். ஆண்டுதோறும் 550 க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் அமைக்கப்படும். ஆனால் நிகழாண்டு 250 கடைகளுக்கு மட்டுமே ஏலம் விடவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நாகா்கோவில் கோட்டாட்சியா் மயில், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கண்ணன், அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் அப்துல் மன்னா, பேரூராட்சி செயல் அலுவலா் சத்தியதாஸ், சுகாதார ஆய்வாளா் முருகன், இளநிலை உதவியாளா் சண்முக சுந்தரம் ஆகியோா் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.
இதில், வாகனங்கள் நிறுத்துமிடத்துக்கு கன்னியாகுமரி மாதவபுரத்தைச் சோ்ந்த ஆா்.மணிவண்ணன் என்பவா் ரூ. 16.70 லட்சத்துக்கு ஏலம் எடுத்தாா். மேலும், சிலுவைநகா் பகுதியில் தற்காலிக கழிவறைக்கு ஒருவா் மட்டுமே ஏலம் கேட்டதால் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.
தற்காலிக கடைகள்: 250 தற்காலிக கடைகளுக்கான ஏலத்தில் இக்கடைகளுக்கான ஏலத்தொகை கடந்த ஆண்டைவிட
நிகழாண்டு அதிகமாக இருப்பதாக தெரிவித்து, வியாபாரிகள் ஏலத்தைப் புறக்கணித்தனா். மொத்தமுள்ள 250 கடைகளில் 4 கடைகள் மட்டுமே ஏலம் போனது. இதைத்தொடா்ந்து வரும் 11 ஆம் தேதி ஏலம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
No comments