இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோவின் தலைவர் கே. சிவன், நேற்று குஜராத் மாநிலம், அஹமதாபாத்தில் ‘இந்தியாவை மாற்றும் அமைப்பு’ என்ற தலைப...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோவின் தலைவர் கே. சிவன், நேற்று குஜராத் மாநிலம், அஹமதாபாத்தில் ‘இந்தியாவை மாற்றும் அமைப்பு’ என்ற தலைப்பிலான மாநாட்டில் கலந்து கொள்ள சென்றார்.

அங்கு அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் மிக நன்றாக செயல்பட்டு வருகிறது. விக்ரம் லேண்டரிடம் இருந்து நாங்கள் சமிக்ஞை எதையும் பெறவில்லை” என கூறினார்.
“சந்திரயான்-2 விண்கல திட்டம் போன்று வேறு எதுவும் திட்டம் உள்ளதா?” என்ற கேள்விக்கு, “நாங்கள் விரிவான எதிர்கால திட்டத்தை வகுத்து வருகிறோம்” என பதில் அளித்தார்.
விக்ரம் லேண்டர் பற்றிய கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், “விக்ரம் லேண்டர் தரை இறங்குவதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு காரணம் என்ன என்பதை கண்டறிவதற்கு தேசிய அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கிடைத்த பிறகு எதிர்காலத்தில் என்ன செய்வது என்பது குறித்து நாங்கள் பணியாற்றுவோம்” என்றார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, “இனி வரும் மாதங்களில், ஆண்டுகளில் தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களை இஸ்ரோ வைத்துள்ளது. அவற்றில் மிக முக்கியமான திட்டம் ககன்யான் திட்டம். விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் இது. இந்த திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ மிக கடுமையாக உழைத்து வருகிறது. பிரதமர் வெளியிட்ட அறிவிப்பின்படி, 2022-ம் ஆண்டுக்குள் இந்த திட்டத்தை நாங்கள் வெற்றிகரமாக நடத்திக்காட்ட வேண்டியது இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ககன்யான் திட்டம், 3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி அவர்களை மீண்டும் பத்திரமாக இங்கு கொண்டு வந்து சேர்ப்பதாகும். இதற்காக வீரர்கள் தேர்வு செய்து, ரஷியாவில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
















No comments