பிரதமர் பதவிக்கு மோடி தகுதியானவர்: ராம்ஜெத்மலானி 21-04-2013 பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தள கட்சி நரேந்திர மோடியை பிரத...
பிரதமர் பதவிக்கு மோடி தகுதியானவர்: ராம்ஜெத்மலானி
21-04-2013
பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தள கட்சி நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இரு கட்சிகள் இடையே பிளவு ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி தகுதியானவர் என்று பாரதீய ஜனதா மேல்சபை எம்.பி.யும், சீனியர் வக்கீலுமான ராம் ஜெத்மலானி கூறியுள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி மதசார்பற்றவர். நேர்மையானவர் நிர்வாக திறமைமிக்கவர். இதனால் பிரதமர் பதவிக்கு அவர் தகுதியானவர். பாரதீய ஜனதா கட்சியின் உயர்ந்த பதவிக்கு அவரே சிறந்தவர். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளரை பாரதீய ஜனதா கண்டிப்பாக அறிவிக்க வேண்டும். மக்களும் அதைதான் எதிர் பார்க்கிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரதமர் வேட்பாளர் யார் என அறிவிப்பது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். மோடியை எதிர்ப்பவர்கள் ஊழல் நிறைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தொடர வேண்டும் என்று விரும்புபவர்கள். இந்திய அரசியல் சட்டத்தை கவனமாக படிக்க வேண்டும். அதில் மதசார்பின்மைக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. அதை புரிந்து கொள்ளாதவர்களே மதசார்பின்மை என்ற பிரச்சினையை கிளப்புகிறார்கள். மதவாதம் மற்றும் மதசார்பின்மை என்ற வார்த்தைகள் தற்போது தவறாக பயன்படுத்தப்படுகின்றன. தவறான புரிதல் அதன் அர்த்தம் மற்றும் முக்கியத்துவம் தெரியாமலேயே பலர் தவறாக பயன்படுத்துகின்றனர்.
நரேந்திரமோடி நமது நாட்டின் ஈடு இணையற்ற மதசார்பற்ற தலைவர் அவர் 100 சதவீதம் மதசார் பற்றவர். 2004-ல் இந்தியா ஒளிர்கிறது. 2009-ல் அத்வானி பிரதமர் வேட்பாளர் என்று பா.ஜனதா முன் வைத்து வெற்றி பெறவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களை மறந்து விடுங்கள். தற்போது மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் பாரதீய ஜனதாவும், தேசிய ஜனநாயக கூட்டணியும் பலன் அடையும். இவ்வாறு ராம்ஜெத் மலானி கூறியுள்ளார்.
No comments