கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இளைஞர் பிரிவுத் தலைவர் பி.ஏ.முகமது ரியாஸ் திருமணம் திருவனந்தபுரத்தில் ...
கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இளைஞர் பிரிவுத் தலைவர் பி.ஏ.முகமது ரியாஸ் திருமணம் திருவனந்தபுரத்தில் மிகவும் எளிமையாக இன்று (15-06-2020) நடந்து முடிந்தது.

திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் பினராயி விஜயன் இல்லத்தில் எளிமையாக நடந்த இத்திருமணத்தில் 50-க்கும் குறைவான நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். கேரள அமைச்சரவையிலிருந்து தொழிற்துறை அமைச்சர் ஜெயராஜன் மட்டுமே பங்கேற்றார். மற்றவர்கள் யாரும் வரவில்லை. வீணா-முகமது ரியாஸ் திருமணம் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா பெங்களூருவில் எக்ஸாலாஜிக் எனும் மென்பொருள் நிறுவனத்தைக் கடந்த 2015-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். தொடக்கத்தில் ஆரக்கிள் நிறுவனத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றிய பின், திருவனந்தபுரத்தில் உள்ள ஆர்பி டெக்சாப்ட் நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாகப் பணிபுரிந்தார். அதன்பின் சுயமாக மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கினார்.
ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி அப்துல் காதரின் மகன் முகமது ரியாஸ். இவர் 2009-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கோழிக்கோடு தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு 838 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராகவனிடம் தோற்றார். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவின் ((DYFI) தேசியத் தலைவராக உள்ளார்.
குறைந்த அளவில் இரு வீட்டார் தரப்பிலும் உறவினர்கள் வந்திருந்தனர். மணமகன் ரியாஸ் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், மணமகள் வீணா கழுத்தில் தாலி கட்டினார்.
இருவருக்குமே இது 2-வது திருமணமாகும். வீணாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி 2015-ம் ஆண்டு விவாகரத்து ஆனது. ஒரு குழந்தை உள்ளது. ரியாஸுக்கு கடந்த 2002-ம் ஆண்டு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments