குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக குறைந்தது எப்படி? என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கும...
குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக குறைந்தது எப்படி? என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17-ஆக இருந்தது. அவர்களில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 16 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். செறுதிக்கோணத்தைச் சேர்ந்த பெண் லேப் டெக்னீசியன் மட்டும் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் வெளி மாநிலங்கள், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வருகிறவர்களுக்கு மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழியில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனையில் புதுச்சேரி, மராட்டிய மாநிலம் மற்றும் சென்னை, தஞ்சை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அவர்களில் 5 வயது பெண் குழந்தையும் ஒன்று ஆகும். இந்த குழந்தை கேரள மாநிலத்தைச் சேர்ந்த குழந்தை. இதனால் அந்த குழந்தைக்கு திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றொருவர் கார் டிரைவர் ஆவார். அவர் கடலூர் மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர். அவர் கடலூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த 2 பேரை தவிர மற்ற 6 பேரும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி கொரோனா சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்று கண்டறியப்பட்ட அன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இந்த 8 பேரும் சேர்க்கப்படவில்லை. மறுநாளான நேற்று முன்தினம் குமரி மாவட்ட கொரோனா பாதித்தவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். புதிதாக தொற்று கண்டறியப்பட்ட 8 பேருடன் சேர்த்து 25 பேர் குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று அந்த எண்ணிக்கை 24 ஆக குறைந்தது. இதுதொடர்பாக குமரி மாவட்ட அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது கூறியதாவது:-
கேரள மாநிலத்தைச் சேர்ந்த 5 வயது குழந்தைக்கு திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் அந்த குழந்தைக்கு கொரோனா இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அதனால் தமிழக அரசு குமரி மாவட்ட பட்டியலில் ஒன்றை குறைத்து வெளியிட்டிருக்கலாம். அல்லது கார் டிரைவர் ஒருவர் கடலூர் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை கடலூர் மாவட்ட பட்டியலில் சேர்த்துவிட்டு, குமரி மாவட்ட பட்டியலில் ஒரு எண்ணிக்கையை குறைத்திருக்கலாம். அதன் முழு விவரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
















No comments