குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கேரள பகுதியில் செங்கல் மகேஸ்வரம் சிவபார்வதி கோவில் உள்ளது. இங்கு 111.2 அடி உயர சிவலிங்கம் அமைக்கப்பட்டுள...
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கேரள பகுதியில் செங்கல் மகேஸ்வரம் சிவபார்வதி கோவில் உள்ளது. இங்கு 111.2 அடி உயர சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிவலிங்கம் நவீன கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு உலகிலேயே அதிக உயரமுள்ள சிவலிங்கம் என ‘இந்திய புக் ஆப் ரெக்கார்டு’ மற்றும் ‘ஆசிய புக் ஆப் ரெக்கார்டு’ ஆகிய சாதனை புத்தகங்களில் இடம்பெற்றது.
இதன் கட்டுமான பணிகள் கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் நிறைவடைந்து நேற்று திறப்பு விழா நடந்தது. விழாவையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து கோவில் மடாதிபதி மகேஸ்வரானந்த சரஸ்வதி சுவாமிகள் குத்துவிளக்கேற்றி வைத்து சிவலிங்கத்தை திறந்து வைத்தார். இதில் கோவில் நிர்வாகிகள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த சிவலிங்கத்தின் உள்பகுதி குகை வடிவில் 8 மாடிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. உள்பகுதி நடைபாதை ஓரங்களில் பல்வேறு சித்தர்களின் சிற்பங்கள் அமைக்கப்பட்டு, 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் உயரமான சிவன் சிலைகள் உள்ளன. ஆனால் உயரமான சிவலிங்கம் வேறு எங்கும் இல்லை. எனவே, இந்த சிவலிங்கம் உலக அளவில் அதிக உயரமானது என்ற பெருமையை பெற்றுள்ளது.
No comments