சவுதி அரேபியா ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் கோவி.சந்துரு தலைமையில் அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் முன்ன...
சவுதி அரேபியா ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் கோவி.சந்துரு தலைமையில் அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது.
இதையடுத்து பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பா.ஜ.க.வின் கொள்கைகளாலும், செயல்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதிலும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி ஏராளமானோர் எங்களோடு இணைந்து வருகின்றனர்.
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதை தமிழக மக்கள் விரும்பவில்லை. தமிழகம் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் எந்த கட்சியும் தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்காது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என மத்திய அரசு நினைப்பதாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
நடிகர் ரஜினிகாந்த் கூறியதைபோன்று தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிடம் இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஏனென்றால் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய மக்கள் செல்வாக்கு பெற்ற மிகப்பெரிய 2 ஆளுமைகள் இப்போது நம்மிடம் இல்லை.
ஈர்ப்பு மற்றும் ஆளுமை போன்றவற்றால் அவர்களுக்கு நிகரான தலைவர்கள் இல்லை என்பது நிதர்சனமான உண்மைதான். அயோத்தி விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உச்சம் தொட்ட தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.
இந்த தீர்ப்பை தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, சில கருத்துக்களை சொல்லியிருக்கிறார். உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றிபெறும். உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை வேகப்படுத்தியிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், ஊடக பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்பட பலர் உடன் இருந்தனர்.
No comments